06 அக்டோபர் 2012

மூதூர் படுகொலைகளுக்கு கொழும்பு பதில் சொல்லியாகவேண்டும்!

ஜெனிவாவில் எதிர்வரும் நவம்பர் 1 ம் திகதி கூடவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறிலங்காவின் மனிதவுரிமை நிலைமைகள் குறித்து ஆராயவுள்ளது. ஓர் இலட்சம் வரையான மக்கள் கொல்லப்பட்டு, யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், மூதூரில் எமது அமைப்பைச் சேர்ந்த 17 மனித நேயப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்த விசாரணையை வலியுறுத்துவதற்கான கடைசிச் சந்தர்ப்பம் இதுவாகும்.
சிறிலங்கா அரசு இவ் யுத்தமீறல் குற்றச்சாட்டிலிருந்து தப்பி விடுவதைத் தடுக்கும்படி ஐ.நா உறுப்புரிமை நாடுகளை நாம் வேண்டுகிறோம். நியாயமான ஐ.நா விசாரணையை வலியுறுத்தி நாம் முன்னெடுத்துள்ள இந்த முறையீட்டு மனுவில் கையெழுத்திடுமாறு அனைவரையும் வேண்டுகிறோம்.
இவ்வாறு கடந்த 2006 ம் ஆண்டு மூதூரில் சிறிலங்கா அரச படைகளால் படுகொலை செய்யப்பட்ட 17 மனிதநேயப் பணியாளர்கள் படுகொலை குறித்து, பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்ட Action against Hunger (ACF) அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த முறையீட்டை எதிர்வரும் அக்டோபர் 22 ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் நாம் கையளிக்க உள்ளோம். எனவே அதற்கு முன் இவ்மனுவில் கையெழுத்திடுமாறு உலக மக்களை வேண்டுகிறோம் என Action against Hunger (ACF) அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம் மனுவில் கையெழுத்திட இங்கே அழுத்தவும்
http://www.dailymoti...7Q0n8mUlUy3oCnj (காணொளி)

இது தொடர்பாக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ACF வெளியிட்டுள்ள மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2006 ம் ஆண்டு ஓகஸ்ட் 4ம் திகதி, மூதூர் பகுதியில் வெடித்த யுத்தத்தில் பொதுமக்கள் பலரோடு, மனிதாபிமான உதவி வழங்கும் அமைப்பின் பணியாளர்களான 17 பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.
இப்பணியாளர்கள் 17 பேரும் அவர்களது அலுவலகத்திலேயே, முழங்காலில் நிற்க வைத்து, தலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இது மனிதாபிமான பணியாளர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான குற்றம் என்பதற்கும் அப்பால், ஒரு மோசமான போர்க்குற்றமாகவே கருதப்படக்கூடியது.
2006 ம் ஆண்டுக்குப் பின்னர், இப்படுகொலை தொடர்பாக சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட 3 விசாரணைகளும் எவ்வித பயனையும் ஏற்படுத்தவில்லை. நீதி விசாரணையில் போடப்பட்ட அரசியல் தடைகள், வெளிப்பாட்டுத்தன்மை இல்லாத நிலை போன்ற பல்வேறு அழுத்தங்கள் இந்த விசாரணைகள் பயனின்றிப் போனதற்கான காரணங்கள்.
எனவே, இப் போர்க்குற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலையீட்டுடன் ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணை அவசியம் என நாம் கருதுகிறோம். பெருமளவில் மக்களை அணிதிரட்டுவதன் மூலம் சிறிலங்கா அரசாங்கம் இவ் யுத்த மீறலுக்குப் பதில்கூறவேண்டி நிலையை ஏற்படுத்த முடியும். இதற்கான சந்தர்ப்பம் இப்போது உருவாகியுள்ளது.
ஜெனிவாவில் எதிர்வரும் நவம்பர் 1 ம் திகதி கூடவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு சிறிலங்காவின் மனிதவுரிமை நிலைமைகள் குறித்து ஆராயவுள்ளது. ஒரு இலட்சம் வரையான மக்கள் கொல்லப்பட்டு, யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், மூதூரில் எமது 17 பணியாளர்கள்மீதும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றம் குறித்த விசாரணையை வலியுறுத்துவதற்கான கடைசிச் சந்தர்ப்பம் இதுவாகும்.
சிறிலங்கா அரசு இவ் யுத்தமீறல் குற்றச்சாட்டிலிருந்து தப்பி விடுவதைத் தடுக்கும்படி ஐ.நா உறுப்புரிமை நாடுகளை நாம் வேண்டுகிறோம். நியாயமான ஐ.நா விசாரணையை வலியுறுத்தி நாம் முன்னெடுத்துள்ள இந்த முறையீட்டில் கையெழுத்திடுமாறு அனைவரையும் வேண்டுகிறோம். இந்த முறையீட்டை எதிர்வரும் அக்டோபர் 22 ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் நாம் கையளிக்க உள்ளோம்.
மூதூர் மனிதநேயப் பணியாளர்கள் படுகொலை குறித்து, சுயாதீனமான ஒரு சர்வதேச விசாரணையை உலக மக்களாகிய நாம் வலியுறுத்துகிறோம். சக மக்களுக்காக உழைத்த எமது 17 பணியாளர்களைப் படுகொலை செய்தவர்கள் ஒரு நீதியான விசாரணையிலிருந்து தப்பிவிடுவதை நாம் ஏற்க முடியாது.
மூதூர் படுகொலை இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இது தொடர்பான தடயங்களை மறைப்பதையும் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதையுமே சிறிலங்கா அரசாங்கம் செய்து வந்துள்ளது. சிறிலங்கா அரசின் இந்த போக்கிற்கு முடிவு கட்டவேண்டியது ஐ.நா வின் பொறுப்பு என நாம் கருதுகிறோம்.
மூதூரில் படுகொலையான எமது தோழர்கள் நினைவாக, இப் படுகொலைகள் மீது உலகின் கவனத்தைத் திருப்ப அனைவரும் முன்வரவேண்டும். படுகொலையாளர்கள் நீதியான ஒரு விசாரணையிலிருந்து தப்புவதை ஏற்க முடியாது என்பதே சர்வதேச சமூகம் இதுதொடர்பில் முன்வைக்கும் செய்தியாக இருக்கவேண்டும்.
இவ்வாறு பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்ட Action against Hunger (ACF) வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக