13 அக்டோபர் 2012

அரசுடன் ஒட்டியிருக்கும் சிறுபான்மை கட்சிகள் இரத்தின தேரரிடம் படிக்கவேண்டும்.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர், தான் எதிர்வரும் வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகி இருக்க போவதாக சொல்லியுள்ளார். தாம் அங்கம் வகிக்கும் அரசாங்கத்துக்கு அழுத்தம் தருவதற்காக அவர் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் அரசியல் நலன்களுக்கு விரோதமான திவிநேகும என்ற வாழ்வின் எழுச்சி சட்டமூலத்திற்கும், உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்டமூலத்திற்கும் சத்தமில்லாமல் ஆதரவாக வாக்களித்த அரசுக்கு ஆதரவு அளிக்கும் தமிழ் பேசும் அமைச்சர்களும், எம்.பி.க்களும் அத்துரலியே ரத்தின தேரரிடம் பாடம் படிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, திவிநேகும என்ற வாழ்வின் எழுச்சி சட்டமூலம், அதிகார பரவலாக்கல் கொள்கைக்கு எதிரானது. அது மாகாண சபைகளுக்கு பரவலாக்கப்பட்ட அதிகாரங்களை மீண்டும் மத்திய அரசுக்கு மீளப்பெற்றுகொள்வது ஆகும். அதனாலேயே அதை மாகாணசபைகளுக்கு சமர்பித்து ஒப்புதல் பெறும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.அதுபோல், உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்டமூலம், தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்களை வெட்டி குறைத்து இந்நாட்டில் இரண்டு பெரும்பான்மை கட்சி அதிகாரத்தை நிலை நாட்டும் கபட நோக்கம் கொண்டதாகும்.
இந்த இரண்டு சட்டமூலங்களுக்கும் அரசுக்கு ஆதரவு அளிக்கும் தமிழ் பேசும் அரசியல்வாதிகள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அரசுடன் அணி சேர்ந்துள்ள அனைத்து தமிழ், முஸ்லிம் கட்சி எம்பீக்களும் கைகளை தூக்கி மசோதாவை, சட்டம் ஆக்கியுள்ளார்கள்.
இந்த சட்டமூலங்கள் தொடர்பில் சிறுபான்மை கட்சிகளுக்கு தெரியாமல் இல்லை. அப்படி சொன்னால் அது நியாயமான கருத்து அல்ல. அரசுடன் ஒட்டி இருக்கும் சிறுபான்மை கட்சிகளுக்கு இந்த இரண்டு சட்ட மூலங்கள் தொடர்பிலும் மாற்று கருத்துகளும், மனக்குழப்பங்களும் இருந்தன. எனினும், அவை தொடர்பில் எதிர்த்து வாக்களிக்கும் அல்லது அழுத்தம் தெரிவிக்கும் ஆளுமையை அரசு ஆதரவு சிறுபான்மை கட்சிகள் இழந்துள்ளன. எனவேதான், அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அரசு ஆதரவு சிறுபான்மை தமிழ் பேசும் கட்சிகள், தமது அரசில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரரிடம் பாடம் படிக்க வேண்டும் என சொல்லுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக