தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக ரெலோ தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டமைப்பின் கொறடாவாக புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்றிரவு நடத்திய கூட்டத்தில் இரா. சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்படும் வரை இதனை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதில்லை என்றும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்திய தூதுவருடனான சந்திப்பின் பின் இக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட்டின் தலைவர் சித்தார்த்தன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுமந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இக்கூட்டத்தில் வைத்தே கூட்டமைப்பின் புதிய பேச்சாளராக செல்வம் அடைக்கலநாதனை நியமிக்கவும் கட்சியின் கொறடாவாக சித்தார்த்தனை நியமிக்கவும் சம்பந்தன் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
தேசியப் பட்டியல் மூலம் நியமனம் பெற்றுள்ள கலையரசனின் இடத்திற்கு ஒரு வருடம் கழித்து அல்லது இரண்டரை வருடம் கழித்து மாவை சேனாதிராஜாவை நியமிக்கவும் கூட்டத்தில் ஆலோசனை முன்வைக்கப்பட்ட போதும் அதனை மாவை சேனாதிராசா நிராகரித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.