17 மார்ச் 2021
பிரச்சாரத்திற்கு ஹெலியில் வந்த கமல்,மக்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினார்!
உடுமலை பகுதியில் பிரசாரம் செய்வதற்காக ஹெலிகாப்டரில் வருகை புரிந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கூட்டம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் பகுதிகளில் பிரச்சாரம் மற்றும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் ஹெலிகாப்டரில் வருகை புரிந்தார். ஜெயலலிதாவுக்கு பின் உடுமலை பகுதிக்கு ஹெலிகாப்டர் பிரச்சாரத்துக்கு வருவதால் கமலஹாசனை காண்பதை விட ஹெலிகாப்டரை காணவே கூட்டம் கூடியது.தொடர்ந்து மடத்துக்குளம் பகுதியில் கமலஹாசன் பிரசாரம் செய்ய வந்தார். அப்போது எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த கமலஹாசன் பொதுமக்கள் கூட்டம் இல்லாததால் ஏமாற்றமடைந்து வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் பிரச்சாரத்தை முடித்து கொண்டு, உடுமலை பகுதிக்கு திரும்பினார். அங்கும் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது.இதனால் கடுப்பான கமல் பிரச்சாரம் செய்யாமலேயே ஹெலிகாப்டரில் பறந்தார். கமலை பார்க்க காத்திருந்த மக்கள் நீதி மய்யத்தினர் மற்றும் சில பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
11 மார்ச் 2021
என் தங்கச்சி காளியம்மாளை நானே இழுத்து வந்தேன்-சீமான்!
தன்னுடைய கட்சி வேட்பாளர்களை எப்படி தேர்வு செய்து, சீட் தருவது என்பது குறித்து சீமான் தன்னுடைய சீக்ரெட்டை உடைத்துள்ளார். இந்த முறையும் அதிமுக - திமுக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.. ஆனால், நாங்கள்தான் மாற்று என்று கமல் ஒரு பக்கம், சீமான் பக்கம், இதற்கு நடுவில் டிடிவி தினகரன் மறுபக்கம் என களமிறங்கி உள்ளனர். கமலும், தினகரனும், கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், சீமான் வழக்கம்போலவே கெத்தாக சிங்கிள் சிங்கிமாக போட்டியிடுகிறார். அதனால் மிகுந்த எதிர்பார்ப்பையும் இந்த முறை தேர்தலில் ஏற்படுத்தி உள்ளார்.இந்நிலையில், தனியார் சேனல் ஒன்றில், சீமானிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.. அதில், "எங்கள் கட்சியின் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களே அடுத்த முறை தேர்தலிலும் போட்டியிடுவார்கள் என்று சொன்னீர்களே.. ஆனால், இந்த முறை 170-க்கும் மேற்பட்ட புதியோருக்கு வாய்ப்பு தந்துள்ளீர்களே? அதுஏன் சாத்தியமில்லாமல் போய்விட்டது? ஒருவேளை உங்கள் கட்சியில் இருந்து நிறைய பேர் வெளியேறி விட்டார்களா? என்ன சிக்கல்?" என்று கேட்கப்பட்டது.அதற்கு சீமான் அளித்த பதில்தான் இது: "இல்லையே.. எல்லாரும் இருக்காங்களே.. அவங்களே விட்டுக் கொடுத்த வேட்பாளர்கள்தான் இவர்கள் எல்லாம்.. யாரும் வெளியேறவில்லை.. கொரோனா காலத்திலேயே ஒன்றரை லட்சம் பேர் கட்சியில் சேர்ந்திருக்காங்க... அதுமட்டுமல்ல, காளியம்மாள் புதுசா வந்த தங்கச்சி.. நான்தான் அவளை கட்டாயப்படுத்தி இழுத்துட்டு வந்தேன்...அவள் ஒரு அமைப்பை வெச்சிக்கிட்டு மீனவர்களுக்காக போராடிட்டு இருந்தவள்.. ஒரு போராட்டக் களத்தில் சந்திக்கும்போது, அவள் பேச்சை கவனித்தேன்.. "நீ எங்கே இதை எல்லாம் பேசணும்னு நினைக்கிறே?"ன்னு நான் அவள்கிட்ட கேட்டேன், .. உடனே அவள் சட்டசபை, பாராளுமன்றத்தில் பேசணும்னு சொன்னாள்.. உடனே நான், சரி வா, அண்ணன்கூட வா-ன்னு நான்தான் அவளை கூட்டிட்டு வந்தேன்.. அப்போ அந்த இடத்தில் அவளைதானே நான் நிப்பாட்டணும்..என் தங்கச்சி சிவசங்கரி இருக்கிறாள்.. எங்க ஐடி தொழில் நுட்ப பிரிவில் இருக்கிறாள்.. அவளையும் அப்படித்தான்.. தேடி தேடிதான் கட்சிக்கு அழைத்து வந்தேன்.. என் தம்பி வெற்றிக்குமரனில் இருந்து எல்லாரும் அதே வேட்பாளர்கள்தானே இந்த முறையும் நிக்கிறாங்க.. நின்னவங்களே இப்பவும் நிக்கறோம்.. புதிதாக வருபவர்களுக்கும் வாய்ப்பு தரணும்தானே? தகுதியானவர்களை அடையாளப்படுத்தி மக்கள் முன்னாடி நிறுத்தணும்னு நினைக்கிறேன்.. அதுதான் என் வளர்ச்சிக்கும் அது சரியாக இருக்கும்.." என்றார்.
03 மார்ச் 2021
அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவிப்பு!
தான் எந்தவொரு பதவிக்கும் பட்டத்திற்கும் ஆசைப்பட்டதில்லை என்று தெரிவித்துள்ள சசிகலா, அரசியலை விட்டு ஒதுங்குவதாகவும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமையப் பிரார்த்திப்பேன் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த நான்கு ஆண்டுகள் சிறையிலிருந்த சசிகலா, கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழகம் திரும்பினார். அப்போது அவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசியலில் சசிகலாவின் வருகை மிகப் பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தான் அரசியலை விட்டு விலகுவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது குறித்தது சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் என்றும் வணங்கும் என் அக்கா ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு இணங்க, அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.நம்முடைய பொது எதிரி, தீயசக்தி என்று ஜெயலலிதா நமக்குக் காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து, ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அவரது தொண்டர்கள் பாடுபடவேண்டும். என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வான நன்றிகள்.ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தைச் செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா ஜெயலலிதாவிடமும் எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)