22 ஜூலை 2017

வானில் இருந்து விழுந்த திரவத்தால் மாணவிகள் பாதிப்பு!      

வானத்தில் இருந்து விழுந்த மஞ்சள் நிற திரவம் உடலில் பட்டதால் யாழ்ப்பாண நகரில் உள்ள வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகள் 18 பேர் மயக்கமடைந்தனர். இவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் மாணவிகள் மைதானத்தில் நின்றிருந்த வேளையில் வானிலிருந்து விழுந்த ஒருவகை திரவம்பட்டே 18 மாணவிகள் பாதிக்கப்பட்டனர். மதிய இடைவேளையின்போது மாணவர்கள் மைதானத்தில் நின்றிருந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, மஞ்சள் நிற திரவமொன்று வானிலிருந்து வீழ்ந்ததாக பாடசாலை மாணவிகள் குறிப்பிட்டனர்.
குறித்த திரவம் மாணவிகளின் உடலில்பட்ட நிலையில் அவர்களது கைகள் சிவந்துள்ளன. அதனை தொடர்ந்து பாடசாலைக்கு வந்த சுகாதார வைத்திய அதிகாரி மாணவர்களை பார்வையிட்டதுடன், உடனடியாக அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பணித்துள்ளார். இந்நிலையில், அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

18 ஜூலை 2017

மரணத்தை ஏமாற்றிய மனிதன்!

தன்னை காப்பாற்றிய காவல்துறை அதிகாரிகளுடன் ஜான் ஆக்பர்ன்
காப்பாற்றிய காவல்துறையினருடன் 

மாரடைப்பினால் நாடித் துடிப்பு நின்று போயிருந்த ஒருவருக்கு 40 நிமிடங்கள் தொடர்ந்து முதலுதவி செய்து அவரை மரணத்தின் பிடியிலிருந்து மருத்துவமனையின் அவசரப்பிரிவு ஊழியர்கள் இருவர் மீட்டுள்ளனர் .
கடந்த ஜுன் 26-ஆம் தேதி தனது வீட்டில் மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்த அமெரிக்காவின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த 36 வயதான ஜான் ஆக்பர்னுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இது குறித்து அவசரப்பிரிவு எண்ணான 911-க்கு தெரிவிக்கப்பட்டதும் , மூன்று குழந்தைகளின் தந்தையான ஆக்பர்னின் வீட்டிற்கு உடனடியாக வந்த இரண்டு காவல்துறையினர் அவருக்கு சி.பி.ஆர் (Cardiopulmonary resuscitation) எனப்படும் இதயத்தை இயங்க வைக்கும் முதலுதவி முயற்சியில் இறங்கியுள்ளனர்.
அவருடைய நாடித்துடிப்பு மீண்டும் வரும் வரை சுமார் 42 நிமிடங்கள் அவர்கள் இருவரும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சி.பி.ஆர் முதலுதவி செய்தும், பாதிக்கப்பட்டவருக்கு 20 நிமிடங்கள் வரை மீண்டும் நாடித்துடிப்பு வரவில்லை எனில் அந்த நபருக்கு மீண்டும் சி.பிஆர் முதலுதவி செய்வது அவசியமில்லை. ஆனால் சார்லெட்-மெக்லென்பர்க் காவல்துறை அதிகாரிகளான லாரன்ஸ் கைலர் மற்றும் நிக்கோலினா பஜிக் ஆகியோர் 40 நிமிடங்களுக்கு மேலாக சி.பி.ஆர் முதலுதவி செய்து ஆக்பர்னின் உயிரை காப்பாற்றியுள்ளது போற்றுதலுக்குரியது.

நான் நலமாக இருக்கிறேன்`:

நாடித்துடிப்பு வந்த பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ஆக்பர்ன், விரைவில் குணமடைவதற்காக மருத்துவர்களால் ஒரு வாரத்திற்கு கோமா நிலையில் வைக்கப்பட்டார்.
மீண்டும் பணிக்கு செல்வதை எளிதாக்குவதற்காக, இன்னும் ஆறு மாதங்கள் அவர் வாகனங்களை இயக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மார்பில் உள்ள புண்களைத் தவிர, தான் முழுமையான குணமடைந்துவிட்டது போல உணர்வதாக அவர் கூறியுள்ளார்.
`என்னுடைய இரண்டாவது வாழ்க்கையை எப்படி சிறப்பாக உருவாக்கிக் கொள்வது என யோசித்து வருகிறேன். அவர்களுடைய பணியையும் தாண்டி என்னை காப்பாற்ற முயற்சி எடுத்து, என்னுடைய ஒவ்வொரு நாளையும் வாழ எனக்கு வாய்ப்பளித்துள்ள அவர்களுக்கு கடன்பட்டுள்ளேன்.` என ஆக்பர்ன் தெரிவித்துள்ளார்.

தங்க நிமிடங்கள்:

இதயத்துடிப்பு நின்ற ஒருவருக்கு உடனடியாக சி.பி.ஆர் முதலுதவி செய்யப்படவில்லை என்றால் அடுத்த ஒவ்வொரு நிமிடமும் அவர் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறு 10 சதவீதம் குறைவதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.` என அலபாமா பல்கலைகழகத்தின் மருத்துவ கல்வித்துறை இணைப் பேராசிரியரான மைக்கேல் குர்ஸ் தெரிவித்துள்ளார்.
`வடக்கு கரோலினாவில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம், சி.பி.ஆர் முதலுதவி உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிப்பதை உணர்த்துகிறது. மாரடைப்பால் பாதிக்கப்பட்டர்களுக்கு உடனடியாக அளிக்கப்படும் சி.பி.ஆர் சிகிச்சை, அவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளை மும்மடங்காக்குகிறது.பெரும்பாலான அமெரிக்க பணியாளர்கள் திடீரென ஏற்படும் மாரடைப்பை கையாளத் தெரியாதவர்களாக இருக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.` என அவர் கூறுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் 3,50,000க்கும் அதிகமானோர் அமெரிக்காவில் மாரடைப்பினால் பாதிக்கப்படுகின்றனர்.அவர்களில் 90 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர். மருத்துவமனைக்கு வெளியில் மாரடைப்பால் பாதிக்கப்படும் 46 சதவீதம் பேர், மருத்துவ உதவிகள் கிடைப்பதற்கு முன்னர் வேறு எந்த வித முதலுதவியும் கிடைக்காததால் உயிரிழக்கின்றனர்.

நன்றி:பிபிசி தமிழ்

10 ஜூலை 2017

மணற்காட்டில் மக்கள் கொந்தளிப்பு!இரு பொலிஸார் கைதாம்!

வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, இரண்டு பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் துன்னாலையைச் சேர்ந்த 24 வயதுடைய யோகராசா தினேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது இடுப்புக்கு மேற் பகுதியில் சூட்டுக்காயம் காணப்பட்டதாக  தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் உடல் மந்திகை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
“சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது எனவும் ஹன்ரர் ரக வாகனம் மணலுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. அதன்பின்னரே முழுமையாக தகவல்களைத் தெரிவிக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 10 நாள்களுக்கு முன்னரே வெளிநாட்டில் இருந்து வந்தார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். நேற்று மதியம் உணவு உண்டுவிட்டு யாழ்ப்பாணம் சென்று வந்து மோட்டார் சைக்கிளை வீட்டில் நிறுத்திய அவர் வல்லிபுரம் கோயிலுக்குச் சென்று வருகின்றேன் என்று கூறிச் சென்றார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.அவர் மணல் கடத்தலில் ஈடுபடுவதில்லை என்றும் அவர் மீண்டும் வெளிநாடு செல்லவிருந்தார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டது. உயிரிழந்தவரின் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர். மந்திகை மருத்துவமனைக்கு வந்த பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜீப் மீது ஆத்திரமடைந்த மக்கள் கற்களால் தாக்குதல் நடத்தினர். மந்திகை மருத்துவமனைப் பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டதை அடுத்து காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகர் மகாசிங்க, காங்கேசன்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உட்பட 50 பொலிஸாரும் அவர்களுடன் இரு வாகனங்களில் சிறப்பு அதிரடி படையினரும் மந்திகை ஆதார மருத்துவனைக்குச் சென்றனர்.
அதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கருதப்படும் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரின் வீட்டின் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நெல்லியடியில் அமைந்துள்ள அவரது வீட்டின்மீது தாக்குதல் நடத்தியவர்கள் வீட்டிலிருந்த பொருள்களையும் சேதப்படுத்தினர். சுமார் 20 பேர் கொண்ட குழுவினர் முகத்தை துணியால் மூடிக் கட்டியவாறு தாக்குதல் நடத்தினர் என்று தெரிவிக்கப்பட்டது.
துன்னாலையில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் காவலரண் ஒன்றும் இனந்தெரியாதோரால் அடித்து நொருக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவித்தன. அதேவேளை, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள கொழும்பிலிருந்து விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

03 ஜூலை 2017

மீண்டும் உதயமாகிறது நவம் அறிவுக்கூடம்!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: செடி, பூ, இயற்கை மற்றும் வெளிப்புறம்வியட்னாமில் இருக்கின்ற அதிகமான பிச்சைக்காரர்கள் அந்தநாட்டின் விடுதலைக்காக போராடி விழுப்புண்அடைந்த போராளிகளே. அதேபோன்றதொரு நிலமை எமது இனத்தின் விடுதலைக்காக போராடுகின்ற போராளிகளுக்கும்  ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே நாம் நவம் அறிவுக்கூடத்தை நிறுவுகின்றோம்.இன்றையகால அவசியத்தின் பொருட்டு ஜனநாயகப் போராளிகள் கட்சி தளத்திலும் புலத்திலும் இன்றும் தலைவரையும் போரளிகளையும் நேசிக்கும் உறவுகளின் பலத்துடனும் ஆசியுடனும் தாயகத்தில் நவம்அறிவுகூடத்தை 15-07-2017உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கின்றோம்.

ஊடகப்பிரிவு
ஜனநாயகபோராளிகள்கட்சி
தலைமைச்செயலகம்
கைவேலி புதுக்குடியிருப்பு