10 ஜூலை 2017

மணற்காட்டில் மக்கள் கொந்தளிப்பு!இரு பொலிஸார் கைதாம்!

வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, இரண்டு பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் துன்னாலையைச் சேர்ந்த 24 வயதுடைய யோகராசா தினேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது இடுப்புக்கு மேற் பகுதியில் சூட்டுக்காயம் காணப்பட்டதாக  தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் உடல் மந்திகை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
“சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது எனவும் ஹன்ரர் ரக வாகனம் மணலுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. அதன்பின்னரே முழுமையாக தகவல்களைத் தெரிவிக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 10 நாள்களுக்கு முன்னரே வெளிநாட்டில் இருந்து வந்தார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். நேற்று மதியம் உணவு உண்டுவிட்டு யாழ்ப்பாணம் சென்று வந்து மோட்டார் சைக்கிளை வீட்டில் நிறுத்திய அவர் வல்லிபுரம் கோயிலுக்குச் சென்று வருகின்றேன் என்று கூறிச் சென்றார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.அவர் மணல் கடத்தலில் ஈடுபடுவதில்லை என்றும் அவர் மீண்டும் வெளிநாடு செல்லவிருந்தார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டது. உயிரிழந்தவரின் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர். மந்திகை மருத்துவமனைக்கு வந்த பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜீப் மீது ஆத்திரமடைந்த மக்கள் கற்களால் தாக்குதல் நடத்தினர். மந்திகை மருத்துவமனைப் பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டதை அடுத்து காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகர் மகாசிங்க, காங்கேசன்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உட்பட 50 பொலிஸாரும் அவர்களுடன் இரு வாகனங்களில் சிறப்பு அதிரடி படையினரும் மந்திகை ஆதார மருத்துவனைக்குச் சென்றனர்.
அதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கருதப்படும் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரின் வீட்டின் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நெல்லியடியில் அமைந்துள்ள அவரது வீட்டின்மீது தாக்குதல் நடத்தியவர்கள் வீட்டிலிருந்த பொருள்களையும் சேதப்படுத்தினர். சுமார் 20 பேர் கொண்ட குழுவினர் முகத்தை துணியால் மூடிக் கட்டியவாறு தாக்குதல் நடத்தினர் என்று தெரிவிக்கப்பட்டது.
துன்னாலையில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் காவலரண் ஒன்றும் இனந்தெரியாதோரால் அடித்து நொருக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவித்தன. அதேவேளை, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள கொழும்பிலிருந்து விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக