சுவரில் உள்ள அந்த ஓட்டையை பார்த்தால் அவ்வளவு பெரிசாக இருக்கிறது. ஒரு ஆள் உள்ளே புகுந்து வெளியே வரும் அளவுக்கு கனகச்சிதமாக ஓட்டைய போட்டு.. லலிதா ஜுவல்லரியில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை ஆட்டைய போட்டுள்ளனர் கொள்ளையர்கள்! திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே லலிதா ஜூவல்லரி நகைக் கடை உள்ளது. 5 வருஷமாக இங்குதான் செயல்பட்டு வருகிறது. நேத்து ராத்திரி வழக்கம்போல, கடை ஊழியர்கள் வேலையை முடித்து வீட்டுக்கு சென்றுவிட்டார்கள். எப்பவுமே 6 வாட்ச்மேன்கள் இந்த கடைக்கு வெளியே நைட் டியூட்டியில் இருப்பார்களாம். அப்படிதான், கடைக்கு வெளியே இரவெல்லாம் காவல் இருந்துள்ளனர்.ஆனால் இன்று காலை கடையை திறந்து பார்த்தால், நகைகள் அனைத்தும் மாயமாகி இருப்பது கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது 3 மாடி கட்டிடம்.. இங்குள்ள முதல் தளத்தில்தான் கொள்ளை நடந்துள்ளது. ஷோ-கேஸில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நகைகள் எல்லாமே அபேஸ் ஆகி இருந்தது. இதையடுத்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.விஷயத்தை கேள்விப்பட்டு, திருச்சி மாநகர கமிஷனர் அமல்ராஜே நேரடியாக கடைக்கு வந்துவிட்டார். பிறகு போலீஸ் அதிகாரிகள் கடையை ஆய்வு செய்தனர். அப்போது, கடையின் மேற்கு பகுதியில் உள்ள சுவரில் ஒரு பெரிய துளை இருப்பதை பார்த்தனர். ஒரு ஆள் உள்ளே நுழைந்து வெளியே ஈஸியாக வந்துவிடும் அளவுக்கு அந்த ஓட்டை இருந்தது. அந்த துளை வழியாகத்தான் கொள்ளையர்கள் உள்ளே வந்திருக்க கூடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.ஆனால் கொள்ளையர்கள் யார் என உறுதியாக தெரியவில்லை. அநேகமாக வடமாநில கொள்ளைக் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எப்படியோ கொள்ளை போன வைரம், தங்க நகைகளின் மதிப்பு 50 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என தெரிகிறது. இதையடுத்து விசாரணை நடந்து வருகிறது.நைட் டியூட்டி வாட்ச்மேன்களையும் போலீசார் விசாரித்து வருவதுடன், கடைக்கு உள்ளே, கடைக்கு வெளியே உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆராய்ந்து வருகிறார்கள். இதில் 2 பேர் கடைக்கு உள்ளே வருவது தெரிகிறது. ஆனால் அவர்கள் முகமூடி அணிந்துள்ளனர். இன்னொரு பக்கம் மோப்பநாய், வரவழைக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 100 கிலோ நகைகளுடன் மாயமான அந்த கொள்ளையர்களை 7 தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.ஆனால் கொள்ளையர்கள் உஷாராக, கொள்ளையடித்து சென்ற வழி வரைக்கும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர். கிட்டத்தட்ட ஒன்றே முக்கால்மணி நேரம் வரை கடைக்குள் பொறுமையாக இருந்து நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். திருச்சி நகரின் மையப்பகுதியில், அதுவும் கடையை சுற்றி இவ்வளவு கேமராக்கள் இருப்பது தெரிந்தும்.. துணிகரமாக இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது சாமான்ய மக்களை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.