11 ஜனவரி 2016

குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை!

திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையில் உள்ள இந்திரா நகரை சேர்ந்த விவசாயி செல்வராஜ் (38). இவரது மனைவி கலைச்செல்வி (32). இவர்களுக்கு கவிப்பிரபா (13), நவீனா (7) என்று இரு பெண் குழந்தைகளும், பத்து மாதத்தில் குகன் என்ற ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.நவீனாவுக்கு காது கேட்கும் திறன் குறைபாடு இருந்தது. கோவை தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தனர். அதேபோல, பத்து மாத குழந்தை குகனுக்கும், காது கேட்கும் திறன் குறைபாடு இருப்பது, சில நாட்களுக்கு முன் தெரியவந்தது.குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு குறித்து, கலைச்செல்வி தொடர்ந்து கவலையுற்று வந்துள்ளார். இதனால், மேலும் விரக்தியடைந்த கலைச்செல்வி, நேற்று காது குறைபாடுள்ள இரு குழந்தையும் தன்னுடைய உடலுடன் சேர்த்துக் கட்டிக்கொண்டு, கயிற்றின் இன்னொரு முனையில் பெரிய கல்லையும் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துள்ளார்.இந்நிலையில், அதிகாலையில் தூங்கி எழுந்த மூத்த மகள் கவிப்பிரபா, தனது தாய், தங்கை, தம்பியை காணாததைக்கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அருகில் தூங்கிக்கொண்டிருந்த தந்தையை எழுப்பியுள்ளார்.கதவை திறந்து பார்த்தபொழுது வீட்டின் வெளிப்பக்கக் கதவு பூட்டியிருந்ததால், அருகில் உள்ள ஒருவருக்கு தொலைபேசியில் அழைத்து திறக்கச் சொல்லியுள்ளார். பின்னர், கலைச்செல்வியையும் குழந்தைகளையும் தேடிப்பார்த்துள்ளனர்.எங்கும் காணாததால், மீண்டும் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கலைச்செல்வி எழுதி வைத்திருந்த கடிதம் இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த செல்வராஜ, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அதன் பேரில், உடுமலை காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் கிணற்றிலிருந்து, சடலங்களை மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக