15 செப்டம்பர் 2016

உரிமைகளை மீட்கப் போராடுங்கள்... தீக்குளித்த விக்னேஷ்!

Vignesh facebook post on Self immolation Protest நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர்
பா. விக்னேஷ் தீக்குளிப்பதற்கு முன்பு எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில் உரிமைகளை மீட்க போராடுங்கள் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்புப் பேரணி நடைபெற்றது. அதில் சீமான், அமீர், சேரன் உள்ளிட்ட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியின்போது பா. விக்னேஷ் திடீரென தன் மீது நெருப்பு வைத்துக கொண்டார். தீயில் கருகிய அவரை அங்கிருந்தோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.95 சதவீத தீக்காயம் ஆகி விட்டதாக கூறியுள்ள டாக்டர்கள் பிழைப்பது கடினம் என்று கூறி விட்டனர். இந்த நிலையில் தீக்குளிப்புக்கு முன்பு விக்னேஷ் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:காவேரியில் நீரை பெற்று விவசாயத்தை மீட்டு எடுக்க போராடுங்கள்.என் தாய் மண் மன்னார்குடியில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதை நிறுத்த போராடுங்கள்.எம் மண்ணை மலடாக்கும் மன்னையில் இயங்கும் சாராய ஆலையை மூட போராடுங்கள்.இந்தி திணிப்பால் தமிழ் மொழி அழிந்து விடும் என்று 800 க்கும் மேற்ப்பட்ட மொழிப்போர் மறவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள். அதுபோல புதிய கல்விக் கொள்கையால் சமஸ்கிருதம் திணிக்கப்பட்டு நம் தாய்மொழி சாகக் கூடாது என்பதற்காக முதல் மற்றும் இறுதி உயிராக என்னுயிர் இருக்கட்டும் அதற்காக போராடுங்கள். * நம் மண்ணில் அந்நிய முதலீட்டை தவிர்த்து தமிழ்த் தேசிய முதலாளிகளை உருவாக்க போராடுங்கள். * நான் வைத்த கோரிக்கைகள் சரியாக இருப்பின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராடும் தமிழர்களுக்கு இனி வாக்குச் செலுத்துங்கள்.
இவன்:பா.விக்னேஷ் திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவர் பாசறை செயலாளர்.என்று அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார் விக்னேஷ். மாணவரான விக்னேஷின் இந்த முடிவு அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக