10 பிப்ரவரி 2017

பேரெழுச்சியுடன் நடைபெற்றது எழுக தமிழ் பேரணி!

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இன்று நடத்தப்பட்ட எழுக தமிழ் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் எழுச்சியுடன் பங்கேற்றனர். மட்டக்களப்பில் இன்று காலை நடைபெற்ற இந்த எழுக தமிழ் நிகழ்வில் "சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை திணி க்க வேண்டாம், அரசியல் கைதிகளை விடுதலை செய், பயங்கரவாத தடை சட்டத்தை நிறுத்து" போன்ற கோசங்களை எழுப்பியவாறு மக்கள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு கல்லடி மணிக்கூடு கோபுரத்திற்கு அருகில் இருந்து வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் ஆயிரக்கணக்கான மக்களுடன் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த எழுச்சி பேரணியில் கலந்து கொண்டனர். இந்த எழுச்சிப் பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்தன், எஸ்.வியாழேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நாவற்குடா விவேகாந்தா விளையாட்டு மைதானத்தை பேரணி வந்தடைந்ததும் அங்கு தமிழ் வாழ்த்துப்பா இசைக்கப்பட்டு எழுக தமிழ் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இங்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சிறப்புரையாற்றினார். மேலும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் எஸ்.வசந்தராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், எஸ்.வியாழேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோரும் உரையாற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக