25 ஜூன் 2017

பக்கபலமாக இருந்த மக்களுக்கு முதல்வர் நன்றி தெரிவிப்பு!

நீதியான தமிழ்த் தேசியக் கொள்கைக்காக என்னுடன் நின்ற அனைவருக்கும் நான் செய்யக் கூடிய கைமாறு என்னவென்றால் தமிழ் மக்கள் நலன் கருதி அவர்களின் ஈடேற்றத்திற்காக உங்களுடன் கைகோர்த்து நிற்பதே என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


எனதினிய தமிழ் நெஞ்சங்களே!

அண்மையில் நடந்தவை கனவாகக் கடந்து விட்டாலும், அவற்றின் தாற்பரியங்கள் சில மேலோங்கி நிற்கின்றன.

முதலாவதாக என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளித்துள்ளீர்கள். ‘கொழும்பில் இருந்து வந்த இவருக்கு மக்கள் பலம் இல்லை’ என்றவர்கள் யாவரும் உங்கள் அன்பின் நிமித்தம் திகைத்து நிற்கின்றார்கள். உங்கள் உணர்வுகளின் வேகம் கண்டு மிரண்டுள்ளார்கள். என்னைக் காண வந்தவர்கள் சேர்க்கப்பட்டவர்கள் அல்ல. உணர்வு மேலீட்டால் சேர்ந்தவர்கள் என்பதை உலகறிச் செய்துள்ளீர்கள்.

இரண்டாவதாக 2013 ஆம் ஆண்டின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டி நான் நடந்து கொண்டு வரும் விதம், எடுத்து வந்த தீர்மானங்கள் ஆகியன சரியோ பிழையோ என்று சலனமுற்றிருந்த வேளையிலே தான் ‘ நீங்கள் போகும் பாதை சரி! நாமும் உங்களுடன் தான்’ என்று நம்பிக்கை ஒளி ஊட்டியுள்ளீர்கள்.

மூன்றாவதாக மக்கள் பலம் என்பதென்ன என்ற கேள்விக்கு விடையை உலகறியச் செய்து விட்டீர்கள்.

நான்காவதாக நந்தவனத்து ஆண்டிகளுக்கு நயமான பாடங்கள் புகட்டி விட்டீர்கள். போட்டுடைத்தவர்களை அடையாளம் காண அவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கியுள்ளீர்கள்.

ஐந்தாவதாக தமிழர் அரசியல் பிரச்சினைகளை ‘ இந்தா அந்தா’ தீர்க்க வருகின்றோம் என்றவர்களுக்கு அவர்களின் 13 ஆம் திருத்தச் சட்ட அடிப்படையிலான தீர்வுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்ற செய்தியை ஓங்கி உரைத்துள்ளீர்கள்.

ஆறாவதாக ஊழலுக்கு எம் மக்கள் எதிரானவர்கள் என்ற செய்தியை உலகறியச் செய்து விட்டீர்கள்.

இவ்வாறு பல செய்திகளை நீங்கள் உங்கள் எழுச்சியால் எடுத்தியம்பி விட்டீர்கள். என்னையும் உங்களுள் ஒருவனாக ஏற்றுள்ளீர்கள். தமிழ் மக்களின் எதிர்காலம் எங்கள் ஒவ்வொருவரினதும் கைகளில் என்பதை ஊரறிய உலகறியச் செய்த உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்!

முக்கியமாக இளைஞர்களின் எழுச்சி என்னைப் பரவசம் கொள்ளச் செய்தது. எம்மவர்களின் அன்பு நெஞ்சங்களின் அரவணைப்பு மனதுக்கு இதமாய் அமைந்தது. அவர்களின் கரிசனையும் ஊக்குவிப்பும் என் கடமைகளை எனக்குணர்த்தின.

நீதியான தமிழ்த் தேசியக் கொள்கைக்காக என்னுடன் நின்ற அனைவருக்கும் நான் செய்யக் கூடிய கைமாறு என்னவென்றால் தமிழ் மக்கள் நலன் கருதி அவர்களின் ஈடேற்றத்திற்காக உங்களுடன் கைகோர்த்து நிற்பதே என்று நம்புகின்றேன்.

உங்கள் யாவருக்கும் இறைவனின் அருள் கிட்டுவதாக எனப் பிரார்த்திக்கின்றேன்.

நன்றி

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்

முதலமைச்சர்

வடமாகாணம்

15 ஜூன் 2017

விக்னேஸ்வரன் மீது சூழ்ச்சி அரங்கேறுகிறது!

பன்னாட்டு சக்திகளின் சதியினால் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டம் முள்ளிவாய்க்காலில் குருதி தோய்ந்த காவியமாய் முடிவுரை எழுதப்பட்டு மக்கள் நிர்க்கதியாக நின்றவேளை தமிழ்மக்களின் உரிமைகளுக்காய் குரல்கொடுக்கவென தமிழ்மக்களின் கொள்கைகளுடன் ஒத்துப்போகின்ற ஒரு தனிப்பெருந் தலைமையாக தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே வடக்கின் முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன்.
அரசு மக்களின் காணிவிவகாரம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் இழுத்தடிப்பான ஓர் போக்கினைக் கடைப்பிடித்து வந்தபோது அரசிற்கு அழுத்தங்களைக் கொடுத்துவந்த ஒரேயொரு மக்கள் பிரதிநிதி விக்கினேஸ்வரன் அவர்களே!
மக்களின் கொள்கைகளை மனதில் நிறுத்தி அரசியல் பாதையில் மக்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக மீட்டெடுப்பதில் முழுமூச்சாகச் செயற்பட்ட இவரை, தென்பகுதி அடுத்த பிரபாகரன் என்றே வர்ணித்தது. சிறுபான்மையினரை அடிமைப்படுத்துவதில் பெருந்தடையாக இருந்த இவரை எவ்வழியில் வீழ்த்தலாம் என்பதில் எந்நேரமும் குறியாக இருந்த அரசு கடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்போது நாட்டில் புலிகளை மீளவும் உருவாக்க முனைகின்றார் எனும் ஓர் குற்றச்சாட்டை இவர்மீது முன்வைத்து பௌத்த மதகுருக்களைத் தூண்டிவிட்டது. அதுவும் பயனற்றுப்போனது.
அடுத்தகட்டமாக விலைபோன சில தமிழ்த் தலைமைகளை வைத்து அரசு தனது நாடகத்தினை அரங்கேற்றி வலுவாக இருந்த தமிழரசுக்கட்சியிடையே ஓர் பிளவினை ஏற்படுத்தி அதனை வலுக்குன்றச் செய்துள்ளது.இதனால் மீண்டும் மக்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.
அரசிற்கு சிம்மசொப்பனமாக இருந்த வடக்கு மாகாணசபையில் இடம்பெற்ற ஊழலை எதிர்த்து அவ் ஊழல்ப் பேர்வழிகளை பதவிநீக்கம் செய்தமைக்காக இன்று ஓர் உன்னதமான, அரசியலில் அத்தனை தந்திரோபாயங்களையும் அறிந்து அதன்படி தமிழ்மக்களுக்கான அரசியல்த் தீர்வுக்கான ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்துவைத்த முதல்வரை அரசு விலைபோன சில தமிழ்த் தலைமைகளை வைத்து பதவியிலிருந்து நீக்கியுள்ளது. இங்குதான் மக்கள் விழிப்படையவேண்டிய கட்டாயமுள்ளது. இப்படியோர் தமிழின மீட்பரை அரசு திட்டமிட்டு சதியால் வீழ்த்தியதைக் கண்டும் மௌனம் காத்து மறுபடியும் அரசின் அடக்குமுறைக்குள் சிக்குண்டு நாதியற்று வாழ்வதா, இல்லை முதல்வரின் பின்னின்று நீதிக்காகக் குரல்கொடுத்து உரிமைகளை வென்றெடுத்து சுதந்திரமாக வாழ்வதா என்பதை முடிவுசெய்து புதிய வரலாற்றினை மக்கள் எழுத வேண்டுமென தமிழ்த்தாய் கண்விழிக்கின்றாள்.

தமிழ் இளைஞர்ளே!!!

முள்ளிவாய்க்காலில் தமிழனின் விடிவுக்காக பொராடியவர்களை துரோகம் எப்படி தோற்கடித்ததோ அதேபோல இன்று மற்றுமொரு துரோகம் நடந்து கொண்டிருக்க நாம் அனைவரும் வீடுகளில் படுத்துறங்கிங்கொண்டிருக்கிறோம். நாளை விடிந்ததும் எமக்காக பாடுபட்ட இன்னொரு மரமும் துரோகிகளால் வெட்டி சாய்க்கப்பட்டிருக்கும் வேதனையோடு கடந்து செல்லப்போகிறோமா? முடிவெடுங்கள் இளைஞர்கள் முடிவெடுத்தால் இயலாது என்று ஒண்றில்லை.
வடக்கில் உள்ள எல்லா மாகாணசபை உறுப்பினர்களின் வீடுகளுக்கு முன்னால் ஒண்று கூடுங்கள் அவர்களை துரோகத்திற்கு துணைபோகவேிடாது தடுத்து நிறுத்துங்கள் உடனடியாக செயற்படுங்கள் இல்லையேல் நாளை ஒரு மாபெரும் துரோகத்தினை கண்டுகளித்த பார்வையாளராகிவிடுவீர்கள்..

-வடமாகாண இளைஞர் பேரவை-

05 ஜூன் 2017

இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி - மறுக்கிறது அரசாங்கம்!

இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக வெளியான செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன தெரிவித்துள்ளன. அண்மைக்காலமாக இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும், பாகிஸ்தானிலிருந்து சதொச நிறுவனம் பிளாஸ்டிக் கலந்த பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய செய்தித் தளங்களில் பரவலான செய்தி பரப்பப்பட்டிருந்தது.எனினும் குறித்த செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என்று மறுக்கும் வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன, உரிய பரிசோதனைகளின் பின்னரே பாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன. அத்துடன் இவ்வாறான செய்திகள் பரவத் தொடங்கியதன் பின்னர் மீண்டுமொரு முறை குறித்த அரிசியை பரிசோதனைக் கூடமொன்றில் சமைத்து பரிசோதனைக்குட்படுத்திய போதிலும் எதுவித பிளாஸ்டிக் கலவைகளும் அடங்கியிருக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
எனவே பொதுமக்களின் நன்மை கருதி குறைந்த விலையில் இறக்குமதி செய்து விற்கப்படும் பாகிஸ்தான் பாஸ்மதி அரிசியை பொதுமக்கள் எதுவித அச்சமும் இன்றி பயன்படுத்தலாம் என்றும் வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன உறுதிப்படுத்தியுள்ளன.

02 ஜூன் 2017

கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு!

தமிழின் முதுபெரும் கவிஞரும், நக்கீரன் குழும இலக்கிய ஏடான இனிய உதயத்தின் நெறியாளருமான கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு எய்தினார். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. செய்தி கேட்டு கவிஞர்களும், தமிழ் அன்பர்களும், இலக்கிய வாதிகளும், அவரது பனையூர் இல்லத்தை நோக்கி திரண்டு கொண்டிருக்கிறார்கள். அவரது இறுதி சடங்குகள் 03.06.2017 சனிக்கிழமை மதியம் 12 மணி அளவில் திருவான்மியூர் அருகே உள்ள கொட்டிவாக்கம் பெரிய பள்ளிவாசலில் நடைபெற உள்ளது. அண்மையில்தான் கவிக்கோ ரகுமானை, திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா திரைப்படத்திற்கு பாட்டெழுத அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் 1937ம் ஆண்டு பிறந்த அப்துல் ரகுமான் புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் தமிழ்துறை தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றி வந்தார்.
இவர் பால்வீதி, நேயர் விருப்பம் உள்ளிட்ட கவிதைகளையும், கரைகளே நதியாவதில்லை போன்ற பல்வேறு கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். 1999-ம் ஆண்டு ஆலாபனை கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றிருந்தார். மேலும் இவர் தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட 14 விருதுகளை பல்வேறு அமைப்புகளால் வென்றிருக்கிறார். ஹைக்கூ, கஜல் உள்ளிட்ட பிறமொழி இலக்கியங்களை தமிழில் புனைந்திருக்கிறார்.
இவரது தந்தையும், தாத்தாவும் சிறந்த உருது கவிஞர்கள். கல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்று, இலக்கண, இலக்கியங்களை கற்று, கவிதை எழுதத் துவங்கினார். தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்த இவர், சமஸ்கிருதமும் பயின்றவர். இவரது முதல் கவிதை தொகுப்பு ‛பால்வீதி' 1974ம் ஆண்டு வெளிவந்தது. தொடர்ந்து பல இதழ்களில் கட்டுரைகள், கவிதைகள் எழுதினார்.
தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்ற இவர், 1999ல் 'ஆலாபனை' கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது வென்றார். கவியரசர் பாரிவிழா விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, கம்பர் விருது, உமறுப்புலவர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.

நன்றி:நக்கீரன்