02 ஜூன் 2017

கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு!

தமிழின் முதுபெரும் கவிஞரும், நக்கீரன் குழும இலக்கிய ஏடான இனிய உதயத்தின் நெறியாளருமான கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு எய்தினார். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. செய்தி கேட்டு கவிஞர்களும், தமிழ் அன்பர்களும், இலக்கிய வாதிகளும், அவரது பனையூர் இல்லத்தை நோக்கி திரண்டு கொண்டிருக்கிறார்கள். அவரது இறுதி சடங்குகள் 03.06.2017 சனிக்கிழமை மதியம் 12 மணி அளவில் திருவான்மியூர் அருகே உள்ள கொட்டிவாக்கம் பெரிய பள்ளிவாசலில் நடைபெற உள்ளது. அண்மையில்தான் கவிக்கோ ரகுமானை, திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா திரைப்படத்திற்கு பாட்டெழுத அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் 1937ம் ஆண்டு பிறந்த அப்துல் ரகுமான் புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் தமிழ்துறை தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றி வந்தார்.
இவர் பால்வீதி, நேயர் விருப்பம் உள்ளிட்ட கவிதைகளையும், கரைகளே நதியாவதில்லை போன்ற பல்வேறு கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். 1999-ம் ஆண்டு ஆலாபனை கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றிருந்தார். மேலும் இவர் தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட 14 விருதுகளை பல்வேறு அமைப்புகளால் வென்றிருக்கிறார். ஹைக்கூ, கஜல் உள்ளிட்ட பிறமொழி இலக்கியங்களை தமிழில் புனைந்திருக்கிறார்.
இவரது தந்தையும், தாத்தாவும் சிறந்த உருது கவிஞர்கள். கல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்று, இலக்கண, இலக்கியங்களை கற்று, கவிதை எழுதத் துவங்கினார். தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்த இவர், சமஸ்கிருதமும் பயின்றவர். இவரது முதல் கவிதை தொகுப்பு ‛பால்வீதி' 1974ம் ஆண்டு வெளிவந்தது. தொடர்ந்து பல இதழ்களில் கட்டுரைகள், கவிதைகள் எழுதினார்.
தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்ற இவர், 1999ல் 'ஆலாபனை' கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது வென்றார். கவியரசர் பாரிவிழா விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, கம்பர் விருது, உமறுப்புலவர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.

நன்றி:நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக