26 டிசம்பர் 2017

சொந்த மக்கள் முன் வரப்பயத்தால் சுமந்திரனுக்கு அதிக பாதுகாப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுக்கு அமைச்சுப்பதவி என்பது புதிதான விடயமல்ல என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.சுமந்திரன் அரசில் அங்கம் வகிக்கும் ஒரு முக்கிய நபர், மக்கள் மத்தியில் சென்றால் அடி விழும் என்பதற்காக அவருக்கு பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுக்கு அமைச்சுப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஒரு அங்கம், அதனைப் பிரித்துப் பார்க்க முடியாது. சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்பட்டதோ, இல்லையோ, தமது சொந்தக் கட்சியில் உள்ள அமைச்சர்களுக்கு மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தினை நல்லாட்சி அரசாங்கம் வைத்திருக்கின்றதென்பது அனைவரும் அறிந்த விடயம்.
ஒரு அமைச்சருக்கு வழங்கக் கூடிய பாதுகாப்பினையும் விட கூடிய பாதுகாப்பு எதிர்க்கட்சி தலைவருக்கும், பேச்சாளருக்கும் உள்ளது.தமது சொந்த மக்களை சந்திக்க முடியாது, அவ்வாறு சந்தித்தால் அடி விழும் என்ற நிலையில், அவர்களைப் பாதுகாப்பதற்கு இவ்வாறான பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்படுகின்றதெனில் எந்தளவிற்கு செல்வாக்கு மிக்கவர்களாக இந்த அரசுடன் இருக்கின்றார்கள் என்பதனை மக்கள் விளங்கிக்கொள்ள முடியும்.இந்த அரசாங்கத்தில் மட்டுமன்றி, கடந்த அரசாங்கத்திலும் 3ஆவது அதி உயர் பாதுகாப்புக்கள் அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், நீலம் திருச்செல்வத்திற்கும் வழங்கப்பட்டிருந்தது.
அரசாங்கத்திற்கு எதிராக போராடி உரிமைகளைப் பெற்றுக்கொள்கின்றோம் எனக் கூறிக்கொண்டு மக்கள் மத்தியில் சென்று வாக்குகளைக் கேட்கின்றார்கள்.ஆனால், அந்த அரசாங்கம் தான் அவர்களை அதிகமாக பாதுகாப்பதற்கு விரும்புகின்றது. யார் அரசாங்கத்துடன், எந்தக் கோணங்களில் இருக்கின்றார்கள் என்பது பற்றி மக்கள் விளங்கிக்கொள்வார்கள்.இந்த விடயங்களை காலம் தாழ்த்தி ஊடகங்கள் தெரிவிப்பது தனக்கு கவலையளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக