06 ஆகஸ்ட் 2015

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரங்களுக்கு தொடர்ந்து இடையூறு!

தேர்தல்விதி முறைகளைமீறினாரென சாவகச்சேரி காவல்துறையினரால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று சாவகச்சேரி நீதிமன்ற அழைப்பாணைக்கு அமைவாக நீதிமன்றினில் ஆஜராகியிருந்தார்.
கடந்த மாதம் 31ம் திகதி சாவகச்சேரி பகுதியினில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தேர்தல் பிரச்சாரத்தினில் ஈடுபட்டடிடிருந்த வேளை அவர்களில் சிலரை பொலிசார்  கைது செய்து தடுத்து வைத்திருந்ததுடன் கடுமையாக அச்சுறுத்தியுமிருந்தனர்.
அவர்கள் தேர்தல் விதி முறைகளை மீறினரென சாவகச்சேரி பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நீதிமன்றம்  அழைப்பாணை விடுத்திருந்தது.அதேவேளை பிரச்சாரக் குழுவுடன் சென்ற யாழ்,மாவட்ட வேட்பாளர் திருநாவுக்கரசு சிவகுமாரனுக்கும் அழைப்பாணை அனுப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக இன்று காலை இருவரும் நீதிமன்றிற்கு சமூகமளித்தனர். அவ்வழக்கு பதில் நீதவான் கணபதிப்பிள்ளையால் எதிர்வரும் ஆகஸ்ட் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள நிலையினில் அரசு திட்டமிட்டு தமது பிரச்சாரங்களை குழப்பிவருவதாக முன்னணி குற்றச்சாட்டுக்களினை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக