13 பிப்ரவரி 2016

மீண்டும் ஒப்பந்தம் இட்டனர் தி.மு.கவும் காங்கிரசும்!

தி.மு.க.காங்கிரஸ் கூட்டணி
வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை தி.மு.க.காங்கிரஸ் இணைந்து சந்திக்கும் என இருகட்சிகளும் தெரிவித்துள்ளன. தி.மு.க.தலைவர் மு.கருணாநிதி,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் இடையேயான சந்திப்பையடுத்து இந்த அறிவிப்பு வெளியானது.காங்கிரஸ் கட்சியின் தமிழகத்திற்கான மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன் ஆகியோர் சனிக்கிழமையன்று காலை 11.30 மணியளவில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுர இல்லத்திற்கு வந்து சந்தித்தனர்.இந்த சந்திப்பின்போது மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், தி.மு.க. - காங்கிரஸ் இணைந்து இந்தத் தேர்தலை சந்திக்கும் என்று தெரிவித்தார்.எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது இனிமேல்தான் முடிவுசெய்யப்படும் என்றும் இந்தக் கூட்டணியில் வேறு கட்சிகள் இடம்பெறுமா என்பதை தி.மு.க. தலைமையே முடிவுசெய்யும் என்றும் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.ஈழப் பிரச்சனையை முன்வைத்து 2013ஆம் ஆண்டில் தி.மு.க.வும் காங்கிரசும் பிரிந்த நிலையில், இப்போது மீண்டும் கூட்டணி அமைத்திருப்பது குறித்துக்கேட்டபோது, அரசியலில் பல்வேறு நெருக்கடிகள், சூழல் காரணமாக பல்வேறு விதமான முடிவுகளை எடுக்கவேண்டியிருப்பதாகவும் ஆனால், பெரும்பலான தருணங்களில் இந்த இரண்டு கட்சிகளுமே இணைந்து தேர்தலை சந்தித்திருப்பதாகவும் குலாம் நபி ஆசாத் கூறினார்.இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், தே.மு.தி.கவுக்கு கருணாநிதி ஏற்கனவே ஊடகங்கள் மூலம் அழைப்பு விடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவும் காங்கிரசும் இணைந்து போட்டியிட்டன. 2013ஆம் ஆண்டில், ஜெனீவாவில் நடந்த மனித உரிமை மாநாட்டில் இந்தியா மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு தொடர்பாக எழுந்த பிரச்சனையில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறியது. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை இரு கட்சிகளுமே தனித் தனியாக சந்தித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக