ஜெனிவாவில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. காணாமல் போனோர் குறித்து விசாரிக்கும் அலுவலகமும் பாதிக்கப்பட்ட மக்களை திருப்திப்படுத்துவதாக இல்லை என்று சமாதானத்திற்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பின் தலைவர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்தார்.ஜெனிவாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை மனித உரிமை நிலை தொடர்பான விசேட உபகுழுக்கூட்டத்தில் உரையாற்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.யுத்தக்குற்றங்கள் மனதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்ற விடயங்களின் அடிப்படையிலேயே ஜகத் ஜயசூரிய மீது சர்வதேச நியாயாதிக்கம் பிரயோகிக்கப்பட்டது. இதேவேளை யுத்தத்தின்போது என்ன நடந் தது என்ற உண்மை கண்டறியப்படவேண்டும். அதனடிப்படையிலேயே தர்ஸ்மன் தலைமையிலான நிபுணர் குழுவை அன்று பான்கீ மூன் நியமித்தார். நானும் அதில் அங்கத்துவம் பெற்றேன்.யுத்தக் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராயுமாறு எமது நிபுணர் குழுவிற்கு பணிக்கப்பட்டது. நாம் சிவிலியன்களின் உயிரிழப்பு தொடர்பாக ஆராய்ந்தோம். எமக்கு கிடைத்த தகவல்களின் படி 40 ஆயிரம் என்று கூறப்பட்டது. நாங்கள் தரவுகளை சேகரித்தோம். எமது பரிந்துரைக்கு அமைவாகவே முன்னாள் ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் உள்ளக விசாரணை பொறிமுறை ஒன்றை இலங்கையின் யுத்தம் தொடர்பில் அமைக்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் நாம் மதிப்பிட்ட எண்ணிக்கையை விட உயிரிழப்புக்கள் அதிகமாக இருக்கும் என கருதப்பட்டது. அது 75 ஆயிரமாக இருக்கும் என்றும் கருதப்பட்டது.நாங்கள் மத பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடினோம். நாங்கள் சாட்சியாளர்களிடம் ஆதாரங்களைப் பெற்றோம். எமக்கு கிடைத்த முறையான தகவல்களின் பிரகாரமே எமது மதிப்பீட்டை வெளியிட்டோம்.இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக ஜெனிவாவில் ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அந்த பிரேரணைக்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு, விசேட நீதிமன்றம், காணாமல்போனோர் அலுவலகம் என்பன குறித்து இந்த பிரேரணை வலியுறுத்துகின்றது. நட்டஈடு தொடர்பாகவும் இந்த பிரேரணை வலியுறுத்துகின்றது. ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இந்தப் பிரேரணையை அமுல்படுத்துவதில் ஏற்பட்டதாக தெரியவில்லை. அரசாங்கம் எதனையும் செய்யவில்லை.உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் பல விடயங்களை அறிந்துகொள்ள முடியும். குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்கள் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை மட்டுமன்றி முழுநாட்டுக்கும் இந்த விடயத்தை தெரிந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். அதனால்தான் ஒரு நாட்டில் நிறுவன ரீதியான கட்டமைப்பில் இதனை செய்யவேண்டுமெனக் கூறப்படுகின்றது.இலங்கை அதிகமான காணாமல்போனோர்கள் தொடர்பான முறைப்பாடுகளை கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக காணப்படுகின்றது. காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தை நியமித்தமையானது ஒரு சிறந்த நடவடிக்கை என்றே சர்வதேச சமூகம் பார்க்கின்றது. அதன் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்றே சர்வதேச சமூகம் கருதுகின்றது. எனினும் வரைபில் சில குறைபாடுகள் இருப்பதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் திருப்தியடையாத நிலைமையும் இருக்கின்றது. பலர் அது சரியான முறையில் இயங்காது என்று குறிப்பிடுகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக