30 ஜூலை 2013

வன்னி வரும் நவநீதம்பிள்ளை இரணைமடுவில் இறங்குவார்!

இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, புலிகளால் இரணைமடுவில் அமைக்கப்பட்ட ஓடுபாதை வழியாகவே வன்னிக்கான பயணத்தை மேற்கொள்வார் என்று தெரியவருகிறது.ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஓகஸ்ட் 25ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இலங்கையில் உண்மையைக் கண்டறியும் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.இவரது பாதுகாப்பு மற்றும் பயண ஏற்பாடுகள் தொடர்பாக ஆராய,ஐ,நா மனித உரிமைகள் ஆணையாளரின் தலைமைப் பாதுகாப்பு ஆலோசகர் ஆப்ரஹாம் மதாய் தலைமையிலான குழுவொன்று கடந்த வாரம் இலங்கை வந்திருந்தது.நவநீதம்பிள்ளை தலைமையிலான குழுவினர், தனியார் விமானம் மூலமே, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்வதற்கே ஐ.நா அதிகாரிகள் விருப்பம் கொண்டிருந்தனர்.ஆனால், இலங்கை அரசு தனது விமானப்படை விமானங்களில் பாதுகாப்பாகப் பயணத்தை மேற்கொள்ளலாம் என்று உத்தரவாதம் அளித்துள்ளது.இலங்கை விமானப்படையின் ஹெலி ருவர்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் அல்லது ஹெலிகளில் நாட்டின் எந்தப் பகுதிக்கும் பாதுகாப்பாகப் பயணம் மேற்கொள்ளலாம் என்று ஐ.நா அதிகாரிகளிடம், மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். நவநீதம்பிள்ளை தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி,முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்குச் சென்று பார்வையிடவுள்ளனர். இந்தக் குழுவினர், விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டு, இலங்கை விமானப்படையால் திருத்தியமைக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்ட இரணைமடு ஓடுதளம் வழியாகவே பயணத்தை மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவநீதம்பிள்ளையின் பயணத்துக்கு ஐ.நா ஒற்றை இயந்திர விமானத்தையே தெரிவு செய்ததாகவும், ஆனால் இலங்கை விமானப்படை,இரட்டை இயந்திர விமானத்தை சேவையில் ஈடுபடுத்துவதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.நவநீதம்பிள்ளையின் பயணத்துக்குத் தனியார் விமானத்தைப் பயன்படுத்தினாலும்,கட்டுநாயக்க மற்றும் மத்தல விமான நிலையங்கள் தவிர,நாட்டில் உள்ள ஏனைய அனைத்து விமான நிலையங்களும் இலங்கை விமானப்படையின் கட்டுப்பாட்டிலேயே உள்ளதால்,தனியார் விமானங்களும் அவற்றையே பயன்படுத்தியாக வேண்டும் என்றும் ஐ.நா அதிகாரிகளிடம் இலங்கை அரசு சுட்டிக்காட்டியுள்ளது.இலங்கை விமானப்படை விமானத்தில் நவநீதம்பிள்ளை குழுவினர் வடக்கு,கிழக்குப் பகுதிகளுக்கு அச்சமின்றிப் பயணம் செய்ய முடியும் என்று ஐ.நா அதிகாரிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட போதிலும், ஹெலி ருவர்ஸ் விமானங்களில் பயணிக்கும் யோசனையை ஐ.நா குழு நிராகரித்து விட்டது.இலங்கை விமானப்படை குடியியல் விமானப் போக்குவரத்து நெறிமுறைகளைக் கடைப்பிடித்தாலும்,அதில் பயணம் மேற்கொள்வது தவறான விம்பத்தைக் காட்டும் என்பதால்,ஐ,நா இந்த வாய்ப்பை விரும்பவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக