18 ஜூலை 2015

கீரிமலை கடற்கரையில் தோன்றியுள்ள அதிசயப் பிள்ளையார்!

யாழ்,கீரிமலை கடற்கரையில் பிள்ளையார் சிலையொன்று திடீரென தென்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பிள்ளையார் சிலையை காண மக்கள் படையெடுத்து வருவதாகவும் மேலும் அறிய வருகிறது.இது கடந்த சில தினங்களின் முன்னர் தென்பட்டதாகவும்,கடலில் மிதந்து வந்ததெனவும் சிலர் தெரிவிக்கின்றனர்.ஆனாலும் இவ்வுருவச்சிலை அமர்ந்திருக்கும் விதமும் அதன் எடையும் ஆச்சரியமூட்டுவதாகவும்  சொல்லப்படுகிறது.இது கடவுளின் அதிசயம் என மக்களால் போற்றப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

16 ஜூலை 2015

சமயத் தலைவர்களிடம் த.தே.ம.முன்னணியினர் ஆசீர்வாதம் பெற்றனர்!

பாராளுமன்றத் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவுள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் தமது தேர்தல் பிரசாரத்தினை ஆரம்பிப்பதற்கு முன்பதாக மத பெரியார்களிடம் ஆசீர்வாதத்தினை பெற்றனர்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், விஸ்வலிங்கம் மணிவண்ணன்(சட்டத்தரணி) திருமதி பத்மினி சிதம்பரநாதன், யாழ் பல்கலைக்கழக முன்னாள் ஆசிரியர் சங்க தலைவரும் விரிவுரையாளருமான அமிர்தலிங்கம் இராசகுமாரன், குருநகர் பாடுமீன் விளையாட்டுக்கழக செயலாளர் தேவதாசன் சுதர்சன், இராமநாதன் மகளீர் கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபர் திருமதி ஆனந்தி, யாழ் பல்கலைக்கழக ஊழியர் வீரசிங்கம், மனித உரிமை செயற்பாட்டாளர் செல்வி சின்னமணி கோகிலவாணி, இந்துக் கல்லூரியின் ஆசிரியர் சங்க முன்னாள் செயலாளர் திருநாவுக்கரசு சிவகுமாரன் ஆகியோர் இன்று காலை யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையிடமும், நல்லை ஆதீன குருமகா சன்நிதானம் அவர்களிடமும், சமூக சேவையாளரும் இந்து மத பெரியாருமான ஆறுதிருமுருகன் அவர்களிடமும் ஆசீர்வாதத்தினை பெற்றுக் கொண்டனர்.

13 ஜூலை 2015

தமிழ் வாக்குகள் எந்தக் கட்சிக்கு?

இம்முறை நடைபெற இருக்கும் இலங்கை பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வடக்கு,கிழக்கு பகுதிகளிலும் பெரும் அரசியல் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.பொதுவாக தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு பெரும் சவால் நிறைந்ததாகவே இருக்கும் என நோக்கர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.இந்த தேர்தல் களத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி இரண்டுக்கும் இடையில்தான் பெரும் போட்டி நிலவும் என மக்கள் மத்தியில் பேச்சுக்கள் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.
சமூக வலைத்தளங்களிலும் இவர்களுக்கு ஆதரவான பதிவுகளையே பெரிதும் காண முடிகிறது.வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் எப்பவுமே கொள்கைகளுடன் ஒன்றிப்போனவர்கள்,கொள்கைகளில் இருந்து பின்வாங்கி பம்மாத்து அரசியல் செய்யும் அரசியல் வாதிகளை தூக்கி வீச அவர்களுக்கு இப்பொழுது சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.அந்த வகையிலே சிங்கக்கொடியுடன் சம்பந்தமானவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் என்பது எதிர்பார்ப்பான ஒன்றாகவே இருக்கிறது.

09 ஜூலை 2015

திருமலையில் தோண்டத்தோண்ட எலும்புக்கூடுகள்!

இலங்கையின் கிழக்கே திருகோணமலை நகரத்தில் மனிதப்புதைகுழி என சந்தேகிக்கப்பட்ட இடத்தில் நடக்கும் அகழ்வுப்பணிகளில் தொடர்ந்து மனித எலும்பு கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன.
இன்று வியாழக்கிழமை மேலும் 6 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து இதுவரை இங்கே கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
திருகோணமலை நகரிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு அண்மித்த பகுதியில் இடம் பெற்று வரும் அகழ்வுப்பணிகளின் போது இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி மக்கெய்ஸர் விளையாட்டு மைதானம் புனரமைப்புப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்த பகுதியில் சில மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டப்பகுதியில் ஏற்கனவே நிர்மாணப்பணிகளை மேற்கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டது. அந்த இடத்திற்கு காவல்துறையின் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.
திருகோணமலை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி டி. சரவணராஜா முன்னிலையில் கடந்த திங்கட்கிழமை அகழ்வுப்பணிகள் ஆரம்பமானபோது சில மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.
நேற்று புதன்கிழமை மூன்றாவதுநாளாக அகழ்வுப்பணிகள் இடம்பெற்றபோது நான்கு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
இந்த மனித எச்சங்கள் அனைத்தையும் சட்ட மருத்துவ அதிகாரியின் பாதுகாப்பில் வைக்குமாறு காவல்துறையினரு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாளை வெள்ளிக்கிழமையும் இந்த அகழ்வுப் பணிகள் தொடரும் என்று அதிகாரிகள் கூறினர் என தெரிவிக்கப்படுகிறது.

03 ஜூலை 2015

உருவாகியது ஜனநாயகப் போராளிகள் கட்சி!

முன்னாள் விடுதலைப் புலிகளின் இயக்கப் போராளிகளின் பிரதிநிதிகளும் அவர்களது ஆதரவாளர்களும், நலன்விரும்பிகளும் இன்று வெள்ளிக்கிழமை (03.07.2015) காலை யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடி பொதுத்தேர்தல் நெருங்கிவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தாம் ஆற்றக்கூடிய , ஆற்றவேண்டிய , ஜனநாயகப் பங்குபணி குறித்து சுமார் மூன்று மணி நேரம் ஆராய்ந்தனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த சிரேஷ்ட போராளிகள் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்து தீர்மானங்களை எடுத்தனர்.
ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் அறப்போர் நிகழ்த்தி, தன்னையே ஆகுதியாக்கிய தியாகி திலீபன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வீரச்சாவடைந்த நல்லூர் கோயில் வீதியில், இன்று நண்பகல் ஒன்றுகூடி தியானம் அனுஷ்டித்த அவர்கள், அதற்கு முன்னதாகத் தாம் எடுத்துக்கொண்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கியப்பட்டுச் செயற்படுவது என்று அங்கு பிரதிக்ஞையும் செய்துகொண்டனர்.
இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-
முன்னாள் போராளிகள், அவர்களின் ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரை ஒன்றிணைத்து ஜனநாயகப் போராளிகள் (Crusaders for Democracy) கட்சி என்ற அமைப்பில் அரசியல் செயற்பாடுகளில் முழு மூச்சாக ஈடுபடுவது. ஈடுபாடுடைய பேராளிகளையும் ஆதரவாளர்களையும் ஐக்கியப்படுத்தி ஒரு புதிய கட்டுறுதியான அமைப்பை ஏற்படுத்துவது. அதுவரை அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக என்.வித்தியாதரன் செயற்படுவார்.
தமிழ்பேசும் மக்களின் ஒட்டுமொத்த நலன்களை வென்றெடுப்பதற்காக அதிர்வுள்ள வகையில் செயற்படும் ஒரு புதிய ஜனநாயக அரசியல் கலாசாரத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதனை நோக்கமாகக் கொண்டு முன்னாள் போராளிகளும் அவர்களுக்கு உரித்தான பங்களிப்பை இவ்விடயத்தில் வழங்குவதற்கு வகை செய்யும் விதத்தில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு தேர்தல் மாவட்டங்கள் தோறும் தமது வேட்பாளர் பட்டியல்களில் விடுதலைப் புலிகளில் இயங்கிய தலா இரு முன்னாள் போராளிகளையாவது இணைத்துக்கொள்ளும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையைக் கேட்டுக்கொள்வது.
தமிழர்களின் உரிமைகளை ஈட்டுவதற்கான ஜனநாயக நடவடிக்கைகளில் அர்த்தமுள்ள வகையில் நேர்மையுடனும் நெஞ்சுரத்துடனும் ஈடுபட்டு, ஒரு முறையான அரசியல் தலைமைத்துவத்தை தமிழர்கள் மத்தியில் நிலைநிறுத்துவது. கடந்த கால இழப்புகளினால் பாதிக்கப்பட்ட நமது மக்களின் வாழ்வாதார வளங்களைக் கட்டி எழுப்பி, புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளை உத்வேகத்துடன் முன்னெடுத்து, அரசியல் கைதிகளின் வலியை நன்கு பட்டறிந்து உணர்ந்தவர்கள் என்ற வகையில் அவர்களின் விரைந்த விடுதலைக்கு அழுத்தம் தந்து அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பது.நீதி, நியாயமான ஜனநாயக நடவடிக்கைகளில் அர்த்த சுத்தியுடன் ஈடுபடுவதன் மூலம், தமிழ்ப்பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதற்கு தமிழர்களுக்கும் தென்னிலங்கையின் நியாயமான அரசியல் தலைமைகளுக்கும் இடையில் பலமான இணைப்புப் பாலமாக விளங்கத்தக்க வகையில் வினைத்திறனுடனும் செயற்படுவது.இத்தீர்மானங்களுடன், பொதுத் தேர்தலை ஒட்டி மேற்கொண்டு எடுக்கவேண்டிய தந்திரோபாய உத்திகள் குறித்தும் ஆராய்ந்து திட்டங்கள் வகுக்கப்பட்டன.

ஊடகப்பிரிவு,
ஜனநாயகப் போராளிகள் கட்சி.