13 நவம்பர் 2016

முதல்வர் ஜெயலலிதா பெயரில் அறிக்கை!

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பெயரில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஓர் அறிக்கை வெளியாகியிருக்கிறது.அனைவரது பிரார்த்தனையாலும், தான் மறுபிறவி எடுத்துள்ளதாக அதில் அவர் தெரிவித்துள்ளார். வெகு விரைவில் முழு உடல் நலன் பெற்று வழக்கமான பணிகளில் ஈடுபடக் காத்திருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.
வரும் 19-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.
அதேபோல், தனது கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில், தொண்டர்கள் அனைவரும் அதிமுக வெற்றிக்காகப் பாடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
ஆனால், அந்த அறிக்கையில் ஜெயலலிதாவின் கையொப்பம் இடம்பெறவில்லை. பெயர் மற்றும் பதவி மட்டுமே குறி்ப்பிடப்பட்டுள்ளது.
அவரது உடல்நிலை தேறிவிட்டதாக அப்போலோ மருத்துமவனை தலைவர் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்த நிலையில், அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே, அவரது உடல் நிலை குறித்த தெளிவு இல்லாத நிலையில், இந்த அறிக்கை வந்திருக்கிறது.இடைத் தேர்தலில் கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்கவும், வாக்காளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி, தனது கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யவுமே இந்த நடவடிக்கை என அரசியல் ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக