26 நவம்பர் 2016

தமிழர் பகுதிகளில் நாளை துயிலுமில்லங்களில் சுடரேற்றல்!

தமிழர் தாயகத்தில் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை சுத்தப்படுத்தும் பணிகள் இன்றும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், நாளை மாலை அங்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில், மாவீரர் நினைவு நாளை அனுஷ்டிப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இங்கு நேற்றும் இன்றும் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இராணுவத்தினரால் உடைக்கப்பட்ட மாவீரர் துயிலும் கல்லறைகள், நடுகற்கள் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன. இந்தச் சிதைவுக் குவியலின் மீது மாவீரர் தீபம் ஏற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த 1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில், 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி வரையில் மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டதுடன், நடுகற்களும் நாட்டப்பட்டன. இங்கு 2150 மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டதுடன் 1000 நடுகற்கள் அமைக்கப்பட்டும் உள்ளன.2009 ஆம் ஆண்டு இராணுவத்தினர் குறித்த பகுதியை கைப்பற்றிய பின்னர் மாவீரர் துயிலுமில்லம் அழிக்கப்பட்டதுடன், கல்லறைகளும் சிதைக்கப்பட்டன. சில மாதங்களுக்கு முன் குறித்த பகுதி இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டது. இதனையடுத்து, உடைக்கப்பட்ட கல்லறைகளை ஒன்று சேர்த்து நாளை அதன் மேல் மாவீரர்களின் நினைவாக சுடரேற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.அதேவேளை, ஒரு சில கல்லறைகள் சேதமடையாத நிலையில் மண்ணில் புதையுண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இராணுவத்தின் பிடியில் இல்லாத துயிலுமில்லங்களில் நாளை மாவீரர்களை நினைவு கூருவதற்கு பரவலான ஏற்பாடுகளில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக