18 ஆகஸ்ட் 2016

ஆணைக்குழு முன் ஒரு போராளி வைத்த கருத்துக்கள்!

அரசியல்வாதிகள் தங்களது சுய லாபங்களுக்காக தமிழ் மக்களுக்காக நாங்கள் இருக்கின்றோம் என்று கூறுவதை தவிர தமிழ் மக்களின் பிரச்சனையை யாரும் கவனிப்பதில்லை,என இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் (17.08.2016) நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கிய  முன்னாள் போராளி ஒருவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.முன்னாள் போராளிகள் 107 நபர்கள் மரணித்துள்ளனர். விஷ ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக பல கருத்துக்கள் வருகின்றன. நாங்கள் தடுப்பு முகாங்களில் இருந்த சமயத்தில் எமக்கு உணவுகள் வழங்கப்பட்டது, தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட உணவுகளை,தடுப்பூசிகளை பரீட்சித்து பார்த்து சாப்பிடும் நிலையில் அன்று நாங்கள் இருக்கவில்லை.
அதனால் அதன் உண்மைத்தன்மை முன்னாள் போராளிகளுக்கு தெரியவில்லை . தற்போது நாங்கள் உள்ள நிலையில் அனைவரும் மன அளவில் பாதிப்படைந்துள்ளோம். 95 வீதம் முன்னாள் போராளிகள் தமக்கு என்ன நடந்திருக்கும் என்ற அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். தேர்தல் காலங்களில் மாத்திரம் அரசியல்வாதிகள் நாங்கள் தமிழர்களுக்காக இருக்கின்றோம், விடுதலைக்காக இருக்கின்றோம். எமக்கு தீர்வுத்திட்டம் வேண்டுமேன பேசும் அவர்கள் முன்னாள் போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி யாரும் கதைப்பதில்லை.முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டது யாவரும் அறிந்த விடயம். ஆனால் சமூகத்துடன் இணைப்பட்ட எந்த அத்தாட்சியும் வெளிப்படவில்லை முன்னாள் போராளி என்பதால் எனது உறவினர்கள் கூட என்னுடன் கதைப்பதில்லை அந்த அளவிற்கு எம்மை இந்த சமூகம் பின்தள்ளியுள்ளது.
நாங்கள் போராடியது எமது தமிழ் பேசும் மக்களுக்காக இன்று தமிழ் மக்கள் இந்த நிலையில் இருப்பதுக்கு காரணம் எமது போராட்டம் இந்த அளவிற்கு வலுப்பெற்றது. நங்கள் போராடாமல் இருந்திருந்தால் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகியிருக்கும்.நாங்கள் போராடியது தமிழ் மக்களுக்காக, போராடிய முன்னாள் போராளிகள் மாவீரர்கள் அவர்கள் ஒன்றும் அறியதாவர்கள் எங்களுக்கு தனிநாடு எங்களுக்கு ஒரு தீர்வுத்திட்டம் , தமிழர் தனித்துவமாக நிம்மதியாக வாழ ஒரு வழி வேண்டுமேன்று போராடி மரணித்தவர்கள் . அவர்களை நாங்கள் நினைவு கூறுவதற்கு கூட தற்போது எதுவும் இல்லை.என்னுடன் ஒன்றாக பயிற்சி எடுத்த 140போராளிகளில் நாங்கள் 4 பேர் தற்போது உயிருடன் இருக்கின்றோம்.136 பேர் மரணித்துள்ளனர். அவர்களை நாங்கள் நினைவு கூறு முடியாதா? அவ்வாறு நினைவு கூர்வது தவறா? யுத்தத்தில் இறந்த இராணுவ வீரர்களுக்கு வடக்கில் நினைவுத் தூபிகள் தமிழ் மக்களுக்காக போராடிய போராளிகளுக்கு தூபிகள் எங்கே என்றும் கேள்வி எழுப்பினார்? உண்மையிலேயே விஷ ஊசி ஏற்றப்படாவிட்டாலும் மனதளவில் முன்னாள் போராளிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண ஒரு நோய் ஏற்ப்பட்டால் கூட ஊசி ஏற்றப்பட்டதால் வந்த நோயாக இருக்குமோ என்ற பயம் அனைத்து முன்னாள் போராளிகளிடமும் தற்போது காணப்படுகின்றது.முன்னாள் போராளியான நாங்கள் ஒரு கூட்டத்திற்கு சென்றால் கூட புலனாய்வு பிரிவினர் எம்மை பின்தொடர்கின்றனர். அப்படியிருந்தும் எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை ஆணைக்குழு முன் எனது கருத்துக்களை கூற வேண்டும் என வந்துள்ளேன் என தெரிவித்தார்.

12 ஆகஸ்ட் 2016

வாழும் போராளிகளை காப்பாற்றக் கோரி ஜெர்மனியில் போராட்டம்!

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் சிறீலங்கா இராணுவத்தினரால் விடுதலைசெய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய போராளிகள் பலர் அண்மைக்காலமாக பல வகைப்பட்ட நோய்களினால் இறந்து வருகின்றனர். இதுவரையிலும் 107 இற்கு மேற்பட்ட போராளிகள் இறந்துள்ளதாக தாயகத்து தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் புற்றுநோயினால் பாதிப்படைந்தே இறந்துள்ளனர்.
சிங்கள பேரினவாத ராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட போராளிகளின் மர்ம மரணங்களைக் கண்டித்தும் ! பன்னாட்டு விசாரணையை கோரியும் பேர்லின் நகரில் யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை 18.08.2016 அன்று மாலை 16:30 மணிக்கு நடைபெறவுள்ளது. கொன்று அழிக்கும் சிங்களப் பேரினவாதத்தின் மறைமுக யுத்தத்தினை அம்பலப்படுத்தவும், யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு இதன் பயங்கரவாதத்தினை எடுத்துச் சொல்லவும் ஒன்று கூடுகிறோம்.போராளிகள் சிறைக்குள்ளும், வெளியேயும் சிதைக்கப்படும் காலகட்டத்தில், நமது போராட்ட குரல்களே அவர்களுக்கான நீதியை கொடுக்கும்.மௌனமாக அரங்கேறிக்கொண்டிருக்கும் உயிர்வதைகளை, உயிர்க்கொலைகளை நிறுத்த இந்த போராட்டங்கள் முக்கியம் என்பதை உணர்ந்து அனைவரும் ஒன்றுகூடுவோம். எமது விடுதலைக்காக தமது வாழ்வையே அர்ப்பணித்து போராடி இன்று பல்வேறு வடிவங்களில் சிங்கள பேரினவாத அரசின் கெடுபிடியால் துன்பப்படும் போராளிகளுக்காக குரல் கொடுப்போம் வாருங்கள்.வாழும் போராளிகளை காப்பாற்ற வேண்டும் ஏனெனில் அழிக்கப்பட்ட எமது சரித்திரத்தில் எஞ்சியுள்ள சாட்சிகளும் , சரித்திரமும் அவர்கள் மட்டும் தான்.

09 ஆகஸ்ட் 2016

நான்காம் மாடியில் ஸ்பிறே அடித்து சித்திரவதை செய்தார்கள்!

கொழும்பிலுள்ள தீவிரவாத விசாரணைப்பிரிவுத் தலைமையகமான 4ஆம் மாடிக்கு விசாரணைக்குச் சென்று வந்த பின்னர் வெயிலில் நிற்கவும், கடினமான வேலைகள் செய்யவும் முடிவதில்லை என முன்னாள் போராளியொருவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், கொழும்பு 4ஆம் மாடியில் எங்களை விசாரணை செய்யும் போது, எங்களுக்கு வலி ஸ்பிறே ஒன்று அடித்து விசாரணை செய்தனர். சீனத் தயாரிப்பான அந்த ஸ்பிறே அடித்தால், வலிகள் தெரியாது. அதன்பிறகு எங்களை சித்திரவதை செய்வார்கள்.சித்திரவதை செய்யும் நேரத்தில் அதனை உணர்ந்து கொள்ள முடியாது. ஆனால், சில மணி நேரங்கள் கழிய வலி தொடங்கினால், அதனைத் தாங்க முடியாது. இவ்வாறு செய்த சித்திரவதைகளால் இன்று கடினமான வேலை செய்ய முடிவதில்லை. வெயிலில் அதிக நேரம் நின்றால், தலைவலி ஏற்பட்டு மயக்கம் வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

06 ஆகஸ்ட் 2016

அவுஸ்திரேலியாவில் கணக்கெடுப்பில் தமிழீழம் என்பதும் இணைப்பு!

அவுஸ்திரேலியாவின் சனத்தொகை கணக்கெடுப்பில்"பிறந்த நாடு"என்பதற்கு தமிழீழம் எனவும் தனியாக குறிக்கப்படமுடியும் எனவும் அதன் மூலம் தமிழீழம் எனக்குறிப்பிடுவோர் தனியான பகுதியினராக கணக்கெடுப்பில் உள்ளடக்கப்ப டுவார்கள் என அந்நாட்டு கணக்கெடுப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைவாக சனத்தொகை கணக்கெடுப்பின்போது பிறந்தநாடு என்பதற்கு தமிழீழம் எனவும் பேசும்மொழி பூர்வீகம் என்பதற்கு தமிழ் எனவும் பயன்படுத்துமாறு சமூக ஆர்வலர்களால் சமூகவலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன.
அவற்றில் சில வருமாறு:
சர்வதேச சமூகங்களும் ஊடகங்களும் எங்களை தமிழர் என்றே வகைப்படுத்துகின்றனர். ஆனால் நாங்கள் எங்களை தமிழர்களாக பிரகடனப்படுத்துவதில் இடர்படுகின்றோம்.
ஒஸ்ரேலியா போன்ற தமிழர்கள் ஏறத்தாழ 75000 அளவில் வசிக்கின்ற நாடுகளில் எமது எண்ணிக்கையை சரிவர பிரகடனப்படுத்துவதன் மூலமே தமிழர் தொடர்பான சமூகபிரச்சனைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ளமுடியும். இம்முறை பிறந்தநாடு எனும்போது தமிழீழம் எனவும் பதிவோம்.
எம்மை நாமே யாரென்றுசொல்வோம்.

Q11 – Country of Birth – TAMIL EELAM
Q15 – Language spoken at home (other than English) – TAMIL
Q17 – Our ancestry – TAMIL

குறிப்பு:
(1)இம்முறை தமிழீழம் (TAMIL EELAM) என்று குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பதியப்படாது போனால் அடுத்தமுறை கணக்கெடுப்பில் தமிழீழம் என்ற தனியான பகுதி கணக்கெடுப்பிலிருந்து நீக்கப்படக்கூடிய சாத்தியம் உண்டு.
(2)ஒஸ்ரேலியாவின் ஏதோவொரு வீட்டில் எதிர்வரும் செவ்வாய்கிழமை 09-08-2016 இரவு இருப்பவர்கள் எவரும் இக்கணக்கெடுப்பில் பங்குபற்றியே ஆகவேண்டும். அல்லது தண்டப்பணம் கட்டவேண்டும். நாங்கள் யார்? எமது அடையாளம் என்ன?இலங்கை தமிழை பூர்வீகமாக கொண்டு, இலங்கையில் பிறந்து, தமிழை ஆங்கிலம் தவிர்ந்த மொழியாக பேசிக்கொண்டு அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்கள்.2016 குடிசன மதிப்பீட்டு கணக்கெடுப்பில் இல 16 – ஆங்கிலம் தவிர்ந்த வேறு எந்த மொழியை வீட்டில் பேசுகிறீர்கள் என்ற கேள்விக்கு தமிழ் என்று குறிப்பிட வேண்டியது எமது வரலாற்று கடமையாகும்.2011 குடிசன மதிப்பீட்டு தரவுகளின்படி வெவ்வேறு பூர்வீகங்களை கொண்ட மக்களில் மொத்தமாக 50151 மக்கள் வீட்டில் தமிழை பேசுகிறார்கள் என்ற கணக்கெடுப்பின் படி தான் அவுஸ்திரேலிய அரசு நமது தமிழ் மக்களுக்கான சலுகைகளையும் மானியங்களையும் வழங்கியது என்பது மிக தெளிவான உண்மையாகும்.கடந்த 5 வருடங்களில் இறந்தவர்களையும் நாட்டை விட்டு பல் வேறு காரணங்களால் வெளியேறியவர்களையும் தவிர்த்து புதிதாக குடியேறியவர்களும், தமிழ் பேசும் மக்களுக்கு பிறந்த குழந்தைகளும்
2016 குடிசன மதிப்பீட்டில் சேர்த்துக்கொள்ள படுவதனால் இம்முறை கணக்கெடுப்பில் இத்தொகையை இரட்டிப்பாக்குவதற்கு நாம் எல்லோரும் எம்மாலான பங்களிப்பை வழங்க வேண்டும். இதற்காக நாமும் நமது குழந்தைகளும், நமது முதியோரும், நமது தமிழ் நண்பர்களும், அவர்களை சார்ந்தவர்களும் ஆங்கிலம் தவிர்ந்த மொழியாக வீட்டில் பேசப்படும் மொழி தமிழ் என்பது குறிப்பிட பட வேண்டிய அவசியத்தை ஊக்குவிக்க வேண்டும். மிகவும் முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது!எமது பூர்வீகம் இலங்கை தமிழ் என்பதாகும்.
நாம் நம்மை இலங்கை தமிழர்கள் என அடையாளம் காட்டி கொண்டால் மட்டுமே உலக அரங்கில் எமது தொகை அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கை தமிழர் தொகையை நிர்ணயிக்கும்.
அப்பொழுது தான் ;
(1)நாம் இங்கே ஏன் புலம்பெயர்ந்தோம் என்ற வரலாறு எழுத்துகளால் பொறிக்கப்படும்.( 2011 இன் எண்ணிக்கைக்கும் 2016 இன் எண்ணிக்கைக்கும் இடையிலான வேறு பாட்டுக்கான காரணம் சுட்டிக்காட்டப்படும்)
(2)நம்மிடையே நம்முடன் வாழும் இலங்கை தமிழ் சகோதர சகோதரிகளின் அகதி விண்ணப்பங்களில் கணிசமான கவன ஈர்ப்பு செலுத்தப்படும்.
(3)அவுஸ்திரேலிய பிரஜா உரிமை கொண்ட இலங்கை தமிழர்கள் அகதிகளாக வந்தவர்களை வழிநடத்தக்கூடிய தகுதியையும் அவர்களை நம் சகோதரங்களாகவும் ஏற்றுக்கொண்டமையையும் உறுதிப்படுத்த முடியும். குறிப்பு;
“இலங்கை” என்பது தான் நாம் பிறந்த நாடு.
Ceylon என்ற பெயர் Sri Lanka என மாற்றப்பட்டமை ஓர் துரதிர்ஷ்டமான, தமிழர்களாகிய எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாத சொற்பதம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஆனால் சமகாலத்தில் எம்மை உலக அரங்கிலோ, அவுஸ்திரேலியாவிலோ இலங்கை தமிழர்கள் என அடையாளப்படுத்த வேண்டிய தேவையை நாம் உணர வேண்டும்.
இதனை அவுஸ்திரேலிய தமிழர் பேரவையும், தமிழ் பாடசாலைகளின் கூட்டமைப்பும், தமிழ் மூத்தோர் சங்கங்களும் உணர்ந்து செயல்படுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
“Other ” என்ற சொற்பதம் கணக்கெடுப்பில் “Other” என்று மட்டும் தான் குறிப்பிடப்படும் என்பது தவிர்க்க முடியாத்து “Tamil nfd” என்ற பூர்வீகம் எமக்கு ஓர் அடையாளத்தை கொடுக்காது என்பதனை nfd (no further definison) குறித்து நிற்கிறது என்ற உண்மையை உணர்ந்துதானாக வேண்டும்.
இத்துடன் இணைக்கப்பட்ட 2011 குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரங்கள் நாம் கடந்த காலத்தில் விட்ட தவறையும், எதிர் காலத்தில் விடப்போகும் தவறையும் புத்தி ஜீவிகளுக்கு உணர்த்தும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
“இலங்கை தமிழர்” என்ற சொற்பதம் எம்மை “Ceylon tamil” என்றோ அல்லது “தமிழ் ஈழ தமிழர்” என்றோ மட்டுமே மறைமுக அடைமானம் கொள்ளப்படும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இலங்கை தமிழர்களாக நம்மை அடையாளம் காட்டி மற்றய உலக தமிழர்களோடு இணைந்து தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் வளர்த்து வாழ வைக்கும் முற்போக்கு சிந்தனையை நமதாக்கிக்கோள்வோம்!

02 ஆகஸ்ட் 2016

நாரந்தனையில் மரத்தில் மாணவனின் சடலம்!

நாரந்தனை 8 ஆம் வட்டாரப் பகுதியில் மரமொன்றில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவனின் சடலம், இன்று மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். வேலணை மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்விகற்ற தவிசாலன் பானுசன் (வயது 17) என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவன் நேற்று முதல் காணாமற்போயிருந்த நிலையிலேயே, இன்று வெற்றுக்காணியிலுள்ள மரமொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாணவனின் இறப்பு தொடர்பில் உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்குச் சென்ற ஊர்காவற்துறை நீதிவான் ஏ.எம்.எம்.றியால், விசாரணைகளை மேற்கொண்டார். அத்துடன், தடய அறிவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. நீதிவானின் உத்தரவுக்கமைய சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.