26 ஜூன் 2013

யாழ்,சிறுமியின் வாழ்வை சிதைத்த சிங்களன்!

யாழ்ப்பாணம் கைதடி சிறுவர் இல்லத்திலிருந்து தப்பியோடிய மூவரில் சிறுமி ஒருவர் களனியில் வீடொன்றில் வேலைக்காரியாக இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
15 வயதான குறித்த சிறுமி அந்த வீட்டில் வேலைக்கு அமர்த்தப்படுவதற்கு முன்னர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிலியந்தலை பிரதேசத்திலுள்ள இளைஞர் ஒருவர் இந்த சிறுமியை ஹோட்டலுக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதன் பின்னர் வீட்டுவேலைக்காக களனியிலுள்ள பெண்ணொருவரிடம் ஒப்படைத்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
வீட்டு ஏஜமானி குறித்த சிறுமியிடம் தகவல்களை பெற்று கிளிநொச்சியிலுள்ள சிறுமியின் தந்தைக்கு இதுதொடர்பில் அறிவித்துள்ளார்.
தந்தையின் கோரிக்கைக்கு அமைவாக இந்த சிறுமியை எஜமானி உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சியை சேர்ந்த குறித்த சிறுமி ஏற்கனவே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் தடுப்புகாவல் உத்தரவிற்கு அமைய கைதடி சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
அங்கிருந்து 21 மற்றும் 22 வயது பெண்களுடன் இந்த சிறுமி மே மாதம் 24 ஆம் திகதி தப்பியோடியுள்ளார். அவர்கள் மூவரும் கொழும்பை நோக்கி பஸ்ஸில் வந்துக்கொண்டிருந்தபோது அதிலொரு யுவதி பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த சிங்களவரான ஆணொருவருடன் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளார்.
அவரின் கோரிக்கைக்கு அமைய மூவரும் பிலியந்தலைக்கு சென்று ஹோட்டலில் தங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சிறுமியை மட்டும் அங்கிருந்த இளைஞரிடம் கைவிட்டுவிட்டு இரண்டு யுவதிகளும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமியை சில நாட்கள் ஹோட்டலில் வைத்து துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன், அதற்கு பின்னர் களனியிலுள்ள பெண்ணொருவரிடம் சிறுமியை வீட்டுவேலைக்காக ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

24 ஜூன் 2013

பூரியின் நியமனத்தை நிராகரித்தது சிறிலங்கா!

சிறிலங்காவுக்கான சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமிக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லிக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறி 13வது திருத்தச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் சிறிலங்கா அரசாங்கத்தின் நகர்வுகளை அடுத்து, இந்தியாவின் மூத்த இராஜதந்திரியான ஹர்தீப்சிங் பூரியை சிறிலங்காவுக்கான சிறப்புத் தூதுவராக நியமிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில், சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் அதிகாரபூர்வமான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
கடந்தவாரம் புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம், இந்திய வெளிவிவகார அமைச்சு பணியகமான சவுத் புளொக்கிற்குச் சென்று பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போதே, இருதரப்பு விவகாரங்களைக் கையாள்வதற்கு சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமிக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு சிறிலங்கா அரசின் கடுமையான எதிர்ப்பை பிரசாத் காரியவசம் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் கொழும்பு ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

23 ஜூன் 2013

தன்னார்வ தொண்டர் கைதிற்கு ஜெர்மனி எதிர்ப்பு!

தமது நாட்டு தன்னார்வ தொண்டர் கைது செய்யப்பட்டமைக்கு ஜெர்மனிய அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையில் 30 ஆண்டுகளாக இயங்கி வந்த முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றின் தலைவர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
பிரிட்டிரிச் ஏபர்ட் அமைப்பின் இலங்கைக் கிளைப் பொறுப்பாளர் நோரா லங்கன்பார்சரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். கடந்த 13ம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஜெர்மனியின் பேர்ளின் நகரில், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் குய்டோ வெஸ்டர்வெல்லை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதே தினத்தில் நோராவை இலங்கை அதிகாரிகள் கைது செய்திருந்தனர். இந்த சம்பவத்திற்கு ஜெர்மனிய வெளிவிவகார அமைச்சர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனம் தனது பணிகளை தடையின்றி மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த கைதினைத் தொடர்ந்து குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. பணியாளர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள வழக்கு ஒன்று தொடர்பிலேயே குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பொறுப்பதிகாரி 200 மில்லியன் சொத்துக்களைப் பிணையாக வைத்து அண்மையில் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்

.

21 ஜூன் 2013

குன்னூரில் இராணுவப் பயிற்சிக் கல்லூரி முற்றுகை-வைகோ

வைகோ 
சிங்கள இராணுவத்தினருக்கு குன்னூர் வெலிங்டனில் பயிற்சியைத் தொடரும் இந்திய அரசின் துரோகம்!
ஜூன் 25 செவ்வாய்கிழமை குன்னூரில் இராணுவப் பயிற்சிக் கல்லூரி முற்றுகை.
இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ் இனத்தையே இலங்கைத் தீவில் பூண்டோடு அழிக்க திட்டமிட்டு சிங்களப் பேரினவாத அரசு நடத்திய கோரமான இனப்படுகொலைக்கு அனைத்து விதத்திலும் உடந்தையாக இருந்து செயல்பட்ட காங்கிரஸ் தலைமை தாங்கும் மத்திய அரசு, தாய்த் தமிழகத்துத் தமிழ் மக்கள் நெஞ்சில் ஓங்கி மிதிப்பதுபோல், சிங்கள இராணுவத்தினருக்கு தமிழ்நாட்டில் திரும்பத் திரும்ப அழைத்துக்கொண்டுவந்து பயிற்சி கொடுக்கிறது. கோடிக்கணக்கான தமிழர்களின் நெஞ்சில் நெருப்பு மூண்டதை மத்திய அரசு துச்சமாகக் கருதுகிறது. தமிழர்களின் தன்மானத்தை வேண்டுமென்றே சீண்டிப் பார்க்கிறது.
தமிழக அரசும், தமிழ் நாட்டில் மான உணர்வுள்ள அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வாளர்களும் மத்திய அரசின் இந்தத் துரோகச் செயலுக்குப் பலத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்ததையும் காங்கிரஸ் அரசு பொருட்படுத்தவே இல்லை. கடந்த மே 27 ஆம் தேதியில் இருந்து சிங்கள இராணுவத்தின் விங் கமாண்டர் தசநாயகே, மேஜர் ஹரிச்சந்திரா ஆகியோர் பயிற்சியைத் தொடருவது மட்டுமல்ல; அக்கொடியோருக்கு நீலகிரி மாவட்டத்தில் இன்பச் சுற்றுலாவையும் நடத்தி இருக்கிறது.
ஒரு பக்கத்தில் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை நாளும் தாக்குவதும், சிறை பிடிப்பதும் தொடர்கிறது. நாதியற்றுப் போய்விடவில்லை தமிழ் இனம்; மானமும் வீரமும் அழிந்து விடவில்லை என்பதை மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டியது நமது தலையாயக் கடமையாகும்.
எனவே, 25 ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை 11 மணிக்கு குன்னூர் வெலிங்டன் இராணுவப் பயிற்சிக் கல்லூரியை முற்றுகையிடுவோம். மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுப்போம். இதனை வலியுறுத்தி ஏற்கனவே அறப்போர் நடத்திய தமிழ் ஈழ உரிமைப் போராட்ட அமைப்புகள், அரசியல் கட்சிகள், ஈழத் தமிழ் உணர்வு அமைப்புகள் ஆகியவற்றின் தோழர்களும், ஈழத் தமிழர்களைக் காக்க பல்வேறு களங்களில் போராடி வருகிற அமைப்புகளின் தோழர்களும், மாணவக் கண்மணிகளும் தமிழகத்தின் நாலா திசைகளில் இருந்தும் அணி திரண்டு வாரீர்! நானும் உங்களோடு பங்கேற்கிறேன்.
இந்திய அரசின் துரோகத்துக்கும், ஆணவத் திமிருக்கும் பாடம் புகட்ட, தமிழகத்தை ஆயத்தப்படுத்த இந்த அறப்போர் களத்தில் அணிதிரள்வோம் என வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

20 ஜூன் 2013

சிவராமை கடத்தியவர்களை அடையாளம் காட்ட முடியும்!

தராகி சிவராம் 
கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான தர்மரட்ணம் சிவராமைக் கடத்திய நபர்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சிவராம் கொலை வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, அங்கு சாட்சியமளித்த கொழும்பு பாமன்கடை பகுதியைச் சேர்ந்த ரஞ்சன் பிரியந்த என்னும் ஆட்டோ ஓட்டுனரே இவ்வாறு கூறியுள்ளார்.
சிவராம் கடத்தப்பட்ட போது தான் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அருகே தனது வண்டியுடன் நின்றிருந்ததாகக் அவர் கூறினார்.
சாம்பல் நிற
ஜீப்பில் வந்த ஒரு குழுவே சிவராமைக் கடத்தியதாகவும், அவர்களை தான் தெளிவாகப் பார்த்ததாகவும், அவர்களை அடையாளம் காட்ட தன்னால் முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வழக்கு விசாரணை ஆகஸ்டு மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு குறித்த சந்தேக நபரான ஆறுமுகம் சிறிஸ்கந்தராஜா என்னும் புளொட் அமைப்பின் அங்கத்தவர் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

19 ஜூன் 2013

பெரும் பதற்றம்- ஆயுதம் தாங்கிய ராணுவம் குவிப்பு!

கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகளவில் செறிந்து வாழும் கிண்ணியாவில் பொதுமக்கள் மற்றும் பொலிசார் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது அங்கு கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
விறகு சேகரிக்கச் செல்லும் வண்டில்காரர்களிடம் அனுமதிப்பத்திரம் தொடர்பில் பொலிசார் வாக்குவாதப்பட்டுள்ளனர். அதனையடுத்து கடும் கோபம் கொண்ட பொலிசார் பொதுமக்களின் ஏராளமான வாகனங்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து பொலிசார் பொதுமக்கள் இடையில் கடும் முறுகல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பதட்டத்தைத் தணித்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் பிரதேச இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். எனினும் அங்கு நிலவும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு ஆயுதம் தாங்கிய ராணுவத்தினர் அங்கு பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

02 ஜூன் 2013

ஆனந்தசங்கரிக்கு ஞானம் பிறந்தது!

ஆனந்தசங்கரி 
சமஷ்டியைக் கைவிட்டு ஒற்றை ஆட்சி அடிப்படையில் ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்குவதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்வது என்பது படுபாதகச் செயலாகும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி. இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக் கப்பட்டிருப்பதாவது, ஐக்கிய தேசியக் கட்சி 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சமஷ் டிக் கொள்கையை முன் வைத்தே போட்டியிட்டது. 49 சதவீத மக்களின் ஆதரவு கிடைத்தது.
தந்தை செல்வாவும் இனப்பிரச் சினைக்குத் தீர்வாகச் சமஷ்டியையே முன் வைத்திருந்தார். இவ்வாறானதொரு நிலையில் ஐ.தே.க சமஷ்டிக் கொள்கையைக் கைவிட்டு ஒற்றை ஆட்சி அடிப்படையில் அரசியல் சாசனத்தை உருவாக்குவதாக கூறியுள்ளது.
இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பாராட்டியிருப்பது பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் கோடி பெறுமதியான சொத்துக்களையும் இழந்த தமிழ் மக்களுக்குச் செய்யும் படுபாதகச் செயலாகும்.
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத அறிக்கைகளை விடும் சுமந்திரன் பதவி விலக வேண்டும். அல்லது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அவரைப் பதவி விலக்க வேண்டும் என்றுள்ளது.

01 ஜூன் 2013

மனைவி கொலையல்லாத மரணம்; கணவனுக்கு 6 வருடங்கள் சிறை!

மனைவிக்குக் கொலை அல்லாத மரணம் விளைவித்த குற்றத்துக்காக அவரது கணவனுக்கு 6 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது யாழ்.மேல் நீதிமன்றம்.
இந்த வழக்கு தீர்ப்புக்காக யாழ்.மேல் நீதிமன்றில் ஆணையாளர் ஜெ.விஸ்வநாதன் முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள் ளப்பட்டது.
கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்த இலட்சுமணன் அமிர்த கௌரி (வயது65) என்பவர் கத்தியால் குத்தப்பட்டு 2010ஆம் ஆண்டு பெப்ரவரி 12ஆம் திகதி உயிரிழந்தார்.
சந்தேகத்தின் பேரில் அவரது கணவனான பே.இலட்சுமணன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அவர் தொடர்பான வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் 2012ஆம் ஆண்டு மே 23ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது அவர்களின் மகனான அமரேசன் மேல்நீதிமன்றில் சாட்சியமளித்திருந்தார்.
அவர் தனது சாட்சியத்தில்,
"கிணற்றடியில் அம்மா கத்தும் சத்தம் கேட்டது. நான் அங்கு சென்றபோது அப்பா அருகிலுள்ள காணிக்குள் ஓடிச்சென்றார். அவரைத் துரத்திச் சென்று அடித்தேன்' என்று கூறினார். அவர்களின் மகளான மகேஸ்வரி சாட்சியமளிக்கையில்,
"அம்மா அண்ணாவின் மடியில் தலை வைத்திருந்தார். பிள்ளைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள். நான் தப்பமாட்டேன். அப்பா என்னைக் கத்தியால் குத்திவிட்டார்' என்று கூறினார்.
சான்றுப் பொருளான கத்தி பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது. உடற்கூற்றுப் பரிசோதனையை மேற்கொண்ட யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியும் சாட்சியமளித்திருந்தார்.
மேல் நீதிமன்றில் எதிரியான இலட்சுமணன் வாக்குமூலம் அளிக்கையில், "எனக்கும் மனைவிக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது. நான் சீவல் தொழில் செய்வதால் எப்பொழுதும் கத்தியை என்னுடன் வைத்திருப்பேன், மனைவியை வேண்டு மென்று குத்தவில்லை என்றும், மனைவி வேறுநபருடன் தொடர்பு வைத்திருந்தார் என்றும் கூறினார்.
இவற்றை வைத்துப் பார்க்கும்போது அவர் கொலை செய்யும் நோக்கில் இதனைச் செய்யவில்லை என்பதை அவதானிக்க முடிகிறது. எதிரிக்கு எதிரான குற்றம் கொலையல்லாத மரணம் விளைவித்த குற்றமாகக் குறைக்கப்படுகின்றது.
அவருக்கு 6 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா குற்றப்பணமும் விதிக்கப்படுகிறது. குற்றப்பணம் செலுத்தத் தவறின் 3 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

அமெரிக்கா என்னதான் சொல்ல முனைகிறது?

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. புலிகளுக்கு ஆதரவானவர்களின் சர்வதேச நவடிக்கைகள் மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.2012ம் ஆண்டில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும்
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக நிதி திரட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளது.