24 ஜூன் 2013

பூரியின் நியமனத்தை நிராகரித்தது சிறிலங்கா!

சிறிலங்காவுக்கான சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமிக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லிக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறி 13வது திருத்தச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் சிறிலங்கா அரசாங்கத்தின் நகர்வுகளை அடுத்து, இந்தியாவின் மூத்த இராஜதந்திரியான ஹர்தீப்சிங் பூரியை சிறிலங்காவுக்கான சிறப்புத் தூதுவராக நியமிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில், சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் அதிகாரபூர்வமான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
கடந்தவாரம் புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம், இந்திய வெளிவிவகார அமைச்சு பணியகமான சவுத் புளொக்கிற்குச் சென்று பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போதே, இருதரப்பு விவகாரங்களைக் கையாள்வதற்கு சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமிக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு சிறிலங்கா அரசின் கடுமையான எதிர்ப்பை பிரசாத் காரியவசம் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் கொழும்பு ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக