வைகோ |
ஜூன் 25 செவ்வாய்கிழமை குன்னூரில் இராணுவப் பயிற்சிக் கல்லூரி முற்றுகை.
இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ் இனத்தையே இலங்கைத் தீவில் பூண்டோடு அழிக்க திட்டமிட்டு சிங்களப் பேரினவாத அரசு நடத்திய கோரமான இனப்படுகொலைக்கு அனைத்து விதத்திலும் உடந்தையாக இருந்து செயல்பட்ட காங்கிரஸ் தலைமை தாங்கும் மத்திய அரசு, தாய்த் தமிழகத்துத் தமிழ் மக்கள் நெஞ்சில் ஓங்கி மிதிப்பதுபோல், சிங்கள இராணுவத்தினருக்கு தமிழ்நாட்டில் திரும்பத் திரும்ப அழைத்துக்கொண்டுவந்து பயிற்சி கொடுக்கிறது. கோடிக்கணக்கான தமிழர்களின் நெஞ்சில் நெருப்பு மூண்டதை மத்திய அரசு துச்சமாகக் கருதுகிறது. தமிழர்களின் தன்மானத்தை வேண்டுமென்றே சீண்டிப் பார்க்கிறது.
தமிழக அரசும், தமிழ் நாட்டில் மான உணர்வுள்ள அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வாளர்களும் மத்திய அரசின் இந்தத் துரோகச் செயலுக்குப் பலத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்ததையும் காங்கிரஸ் அரசு பொருட்படுத்தவே இல்லை. கடந்த மே 27 ஆம் தேதியில் இருந்து சிங்கள இராணுவத்தின் விங் கமாண்டர் தசநாயகே, மேஜர் ஹரிச்சந்திரா ஆகியோர் பயிற்சியைத் தொடருவது மட்டுமல்ல; அக்கொடியோருக்கு நீலகிரி மாவட்டத்தில் இன்பச் சுற்றுலாவையும் நடத்தி இருக்கிறது.
ஒரு பக்கத்தில் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை நாளும் தாக்குவதும், சிறை பிடிப்பதும் தொடர்கிறது. நாதியற்றுப் போய்விடவில்லை தமிழ் இனம்; மானமும் வீரமும் அழிந்து விடவில்லை என்பதை மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டியது நமது தலையாயக் கடமையாகும்.
எனவே, 25 ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை 11 மணிக்கு குன்னூர் வெலிங்டன் இராணுவப் பயிற்சிக் கல்லூரியை முற்றுகையிடுவோம். மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுப்போம். இதனை வலியுறுத்தி ஏற்கனவே அறப்போர் நடத்திய தமிழ் ஈழ உரிமைப் போராட்ட அமைப்புகள், அரசியல் கட்சிகள், ஈழத் தமிழ் உணர்வு அமைப்புகள் ஆகியவற்றின் தோழர்களும், ஈழத் தமிழர்களைக் காக்க பல்வேறு களங்களில் போராடி வருகிற அமைப்புகளின் தோழர்களும், மாணவக் கண்மணிகளும் தமிழகத்தின் நாலா திசைகளில் இருந்தும் அணி திரண்டு வாரீர்! நானும் உங்களோடு பங்கேற்கிறேன்.
இந்திய அரசின் துரோகத்துக்கும், ஆணவத் திமிருக்கும் பாடம் புகட்ட, தமிழகத்தை ஆயத்தப்படுத்த இந்த அறப்போர் களத்தில் அணிதிரள்வோம் என வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக