26 பிப்ரவரி 2018

கூட்டமைப்பின் செயற்பாடு பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்கவில்லை!

இலங்கை அரசாங்கம் ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உறுப்பு நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்பதன் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக இல்லை என்பது தெளிவாகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் இலங்கை அரசாங்கம் பொறுப்புகூறல் தொடர்பாக முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டு 2 மாற்று வழிகளாக, போர்குற்றங்களை புரிந்தவர்கள் என அறியப்படுபவர்கள் உறுப்பு நாடுகளுக்கு பயணம் செய்தால் உறுப்பு நாடுகள் தமது நீதிமன்றங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அல்லது, விசேட குற்றவியல் தீர்பாயம் ஒன்றை அமைத்து அதற்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.இவ்வாறான நிலையில் கடந்த 24 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐ.நா தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த ஐ.நாவின் உறுப்பு நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளது. இலங்கைக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு கால அவகாசத்தில் 1 ஆண்டு நிறைவில் இலங்கை அரசு ஒன்றும் செய்யவில்லை.இவ்வாறான நிலையில், தமிழ்தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருடைய கருத்தை வலுப்படுத்த வேண்டுமே தவிர ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்கக் கூடாது. ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் குரலாக இல்லை. ஆகவே பாதிக்கப்பட்ட மக்களின் குரல் ஐ.நா வரை செல்ல வேண்டும். அதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கையெழுத்து போராட்டம் ஒன்றை ஒழுங்கமைத்துள்ளது. இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து கையொப்பங்களை இடவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக