19 மார்ச் 2012

இன்று ஜெனிவாவில் சனல் 4 ஆவணப்படம்.

சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட சிறிலங்கா போர்க்குற்றம் தொடர்பான ஆவணப்படம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இன்று காண்பிக்கப்படவுள்ளது. இதற்குப் போட்டியாக இலங்கை அரசு தயாரித்துள்ள "விந்தையான முன்னேற்றம், முரண்பாடு, சமாதானம், அபிவிருத்தி மற்றும் வளமான வாழ்க்கை" எனும் தலைப்பில் இலங்கை தூதுக்குழுவினர் விவரணப் படமொன்றை நாளை காண்பிக்கவுள்ளனர்.
சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இன்று திங்கட்கிழமை ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மகாநாட்டின் போது ஏக காலத்தில் இன்னுமொரு மண்டபத்தில் காண்பிக்கவுள்ள தொலைக்காட்சி விவரணப் படங்களிலுள்ள தகவல்களை மறுதலிக்கும் முகமாக, இலங்கை தூதுக் குழுவினர் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தலைமையில் நாளை செவ்வாய்க்கிழமை மற்றுமொரு நிகழ்ச்சியை ஜெனீவா ஐ.நா. சபை கட்டிடத்தில் இடம்பெறவிருக்கின்றது. இதற்கு சகல அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளையும் சமுகமளிக்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொலைக்காட்சி திரைச்சித்திரத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பே உலகின் முன்னிலையில் உள்ள ஒரு பயங்கரவாத இயக்கம் என்றும் அதற்கு வெகு தூரத்தில் இரண்டாவது இடத்தில் அல்குவைதா அமைப்பும் இருக்கிறதென்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதியின் மனித உரிமைகள் தூதுவரும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா, பிரதி அமைச்சர்களான பைசர் முஸ்தபா, நியோமல் பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர்களான சஜீன்வாஸ் குணவர்தன, ரஜீவ் விஜேசிங்க, மட்டக்களப்பு மாவட் டத்தின் இணைப்பாளர் தம்பிமுத்து, ஜெனீவா ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இலங்கைப் பிரதிநிதி தமரா குணநாயகம் ஆகியோரும் பங்குகொள்கின்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக