24 மார்ச் 2012

பிரேரணை நிறைவேற்றம் பீரிசும் குதூகலத்தில்!

ஜெனீவாவில் இலங்கைக்கெதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டதால் அமெரிக்காவைவிட இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அதிக சந்தோசத்தில் இருப்பதாக ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கெதிராக அமெரிக்காக கொண்டுவந்த பிரேரணை, இந்தியாவின் ஆதரவுடன் ஒன்பது மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. மனித உரிமைகளுக்கான ஜனாதிபதியின் விசேட தூதுவரான மகிந்த சமரசிங்கவின் தலைமையின் கீழ், தன்னை ஜெனீவா அனுப்பியதால் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பெரும் மனக்கவலையுடன் காணப்படுகிறார்.
மகிந்த ராஜபக்‌ஷ தன்னை மட்டம்தட்டுவதற்காக இவ்வாறு திட்டமிட்டு செயற்பட்டதாகவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் ஜீ.எல்.பீரிஸ் கூறியிருந்தார். அத்துடன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, அமைச்சர் மகிந்த சமரசிங்க ஆகியோரது ஜெனீவா செயற்பாடுகளையும், இராஜதந்திர நகர்வுகளையும் ஆரம்பம் முதலே ஜீ.எல். பீரிஸ் விமர்சித்து வந்தார்.
முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிசுடன் இணைந்து தனக்கு ”ஜெனீவா தோல்வி பீரிஸ்” என்ற பட்டப்பெயரை சூட்டி, தன்னை மட்டம்தட்டியதற்கு இந்தத் தோல்வி சிறந்த அடியாகவும், பாடமாகவும் இருக்கும் என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்து சந்தோசப்பட்டதாக ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக சர்வதேசம் தன்னையே ஏற்றுக்கொண்டுள்தாக தெரிவித்த அமைச்சர் ஜீ.எல், இந்தத் தோல்விக்கு தானே பதில்சொல்ல வேண்டியிருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்தப் பிரேரணைத் தோற்கடிக்கும் வழிமுறைகளைக் கண்டறிய இருந்த சிறந்தவொரு சந்தர்ப்பத்தை ஜனாதிபதி தடுத்துவிட்டதாகவும், அமெரிக்காவின் அழைப்பை ஏற்று தான் அங்கு சென்றிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது எனவும் கூறியுள்ளார். எனினும், எக்காரணம் கொண்டும் அமெரிக்காவிற்கு செல்ல வேண்டாம் என ஜனாதிபதி விதித்த கடுமையான உத்தரவே இந்தத் தோல்விக்கு வித்திட்டதாகவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக