11 மார்ச் 2012

ஜிம்மி கார்ட்டரைக் களமிறக்கியுள்ள அமெரிக்கா.


ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரவுள்ள பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதற்காகக் முழுமூச்சுடன் செயற்படும் அமெரிக்கா - ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந் நடவடிக்கைக்காக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், மனித உரிமைகள் தொடர்பிலான சமூக ஆர்வலருமான ஜிம்மி கார்ட்டரைக் களமிறக்கியுள்ளது அமெரிக்கா. இதற்கமைய தனது தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி அமெரிக்காவின் பிரேரணையை ஜெனிவாவில் நிறைவேற்ற ஜிம்மி கார்ட்டர் முழுவீச்சில் செயற்பட்டு வருகிறார் என இராஜதந்திர வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.
"எமது முன்னாள் ஜனாதிபதி கார்ட்டர் ஆபிரிக்க நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுடன் நெருங்கிய நட்புறவைக் கொண்டவராவார். தனது செல்வாக்கைப் பயன்படுத்தியதால் இதுவரை பல நாடுகள் எமது பிரேரணையை ஆதரிப்பதாக உறுதியளித்துள்ளன.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் சமூக சேவைகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவராவார். உலகளாவியரீதியில் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்கு அவர் பெரிதும் உதவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தென்னாபிரிக்காவின் விடுதலைப் போராளி என்று வர்ணிக்கப்படும் நெல்சன் மண்டேலாவை தலைமையாகக் கொண்ட "த எல்டர்ஸ்" அமைப்பு ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகள் ஆதரிக்க வேண்டுமென கடிதம் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பில் ஜிம்மி கார்ட்டரும் ஒரு முக்கியமான உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக