22 மே 2014

மோடி பதவியேற்பு விழாவை முதல்வர் புறக்கணிப்பார்?

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை அழைத்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் முதல்வர் ஜெயலலிதா அதில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கக் கூடும் என்று தெரிகிறது. நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக வரும் 26-ந் தேதியன்று மாலை பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவுக்கு தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் அமைப்பின் தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் இடம்பெற்றுள்ளார். இந்த தகவல்கள் நேற்று வெளியானது முதலே தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் உருவாகி உள்ளன.பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான மதிமுக பொதுச்செயலர் வைகோ, ராஜபக்சேவை அனுமதிக்கக் கூடாது என மோடியை இருகரம் கூப்பி கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார். மே 17 இயக்கத்தின் சார்பில் வரும் 25-ந் தேதி சென்னையில் போராட்டம் நடைபெற உள்ளது. இதனிடையே ராஜபக்சேவை அழைத்ததற்கு புதிய மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டசபை தீர்மானங்களை சுட்டிக்காட்டியும் முந்தைய காங்கிரஸ் அரசு அலட்சியப்படுத்தியதையும் அதில் விவரித்துள்ளார். அத்துடன் புதிய மத்திய அரசின் நடவடிக்கையானது தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி, வெந்தபுண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் மோடி பதவியேற்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்காமல் புறக்கணிக்கக் கூடும் என்றே தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக