05 மே 2014

இந்தியாவின் நடுநிலமைக்கு கூட்டமைப்பே காரணம்!

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா நடுநிலை வகித்தமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஞாயிற்றுக்கிழமை (04) தெரிவித்தார்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
2012 ஆம் ஆண்டு தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தமைக்கு தமிழ் நாட்டில் இடம்பெற்ற பாரிய போராட்டங்கள் தான் காரணம். இதை தெரிந்து கொண்ட சுமந்திரன் தமிழ்நாட்டில் பேசும் போது உங்கள் பிரச்சினையினை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் எம்பிரச்சினையினை நாம் பார்த்துக் கொள்கின்றோம் என்று கூறினார்.
இவ்வாறு சுமந்திரன் தமிழ்நாட்டினை வாயை மூடும்படி கூறியதால் தான் இம்முறை தமிழ்நாட்டின் போராட்டங்கள் பலவீனமுற்று காணப்பட்டது. ஆகையால் இந்தியாவின் இந்த முடிவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம்.
சுமந்திரன் ஐ.நா.அமர்வுகள் தொடர்பான பல பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். நாம் சர்வதேச விசாரணையினை கோரவில்லை என்று சுமந்திரன் கூறியுள்ளார். மனித உரிமை மீறல் விசாரணை மட்டும் தான் மக்கள் விரும்புகிறார்கள் என்பது இலங்கை அரசின் எதிர்பார்ப்பு என்றும் இதற்கு மேலாக போர்க் குற்ற விசாரணையும் இடம்பெறும் என்று சுமந்திரன் கூறுகிறார்.
அமெரிக்கத் தீர்மானம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டே கருத்துக்களை மட்டுப்படுத்தியுள்ளது. மனித உரிமை என்பது வேறு, மனிதாபிமான சட்டம் என்பது வேறு. மனித உரிமை விசாரணை நடக்க வேண்டுமானால் அதில் மனிதாபிமான சட்டத்திற்குள் அடங்காதவை நடத்தப்படவேண்டும். ஆனால் உண்மையில் தமிழருக்கு இடம்பெற்ற அநியாயம் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்குள் வரும் என்று நாம் கூறினோம் தமிழர் தொடர்பில் இத்தீர்மானத்தில் எதுவும் இல்லை என ஒரு சில தரப்பினர் கூறியமையினாலேயே நாம் இதனை எதிர்த்தோம் என்று ஆபிரிக்க நாடுகள் கூறியதாக சுமந்திரன் கூறியிருந்தார்.ஆனால் உண்மையில் நான் அந்நாட்டவர்களுடன் கதைத்த போது, ‘அமெரிக்க கொண்டு வரும் எந்தத் தீர்மானத்தினையும் ஏற்பதில்லை என்றும், அமெரிக்க உள்நாட்டு அரசியலினைக் குழப்பி அதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்துவதினாலேயே ஏற்பதில்லையெனத்’ தெரிவித்திருந்தனர்.ஆகவே ஐ.நா.வில் நானும் கலந்துகொண்டேன் என்ற வகையில் மக்களுக்கு உண்மையினை கூறவேண்டிய கடமைகள் எமக்குண்டு. ஆகவே மக்கள் எதை சொன்னாலும் நம்புவார்கள் என்று நினைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு பிழையான கருத்துக்களை கூறி மக்களை திசை திருப்ப பார்க்கிறார்கள்’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக