07 மே 2014

இலங்கைப் போர்க்குற்ற விசாரணைக்கு மேற்கு நாடுகள் நிதியுதவி!

இலங்கையின் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை மேற்கொள்ள 15 லட்சம் டொலர் நிதி தேவைப்படுவதாக ஐ.நா அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுக்கவே இந்தத் தொகை தேவைப்படுவதாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை கணக்கிட்டுள்ளது. இலங்கை நாணயத்தின் பெறுமதியில் சுமார் இருநூறு மில்லியன் ரூபா பெறுமதியான இந்தத் தொகையை திரட்டிக் கொள்வது மற்றும் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை எவ்வாறு முன்கொண்டு செல்வது என்பன தொடர்பில் ஐ.நா தலைமையகத்தில் அண்மையில் கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றுள்ளது.
இதற்கிடையே இலங்கைக்கு எதிரான இந்த சர்வதேச விசாரணைக்குத் தேவையான பணத்தில் ஒருபகுதியை கனடா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளன. மேலும் தேவைப்படும் எஞ்சிய பணத்தைத் திரட்டித் தரவும் அந்நாடுகள் முன்வந்துள்ளன. இதனையடுத்து இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக் குழுவொன்றை அமைப்பது மற்றும் அதன் பொறுப்புகள் தொடர்பில் இம்மாத இறுதிக்குள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு அறிவித்தல் ஒன்றை விடுக்கவுள்ளது.
அதேவேளை, இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த நோர்வே நிதி உதவிகளை வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு இவ்வாறு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. நிதி வழங்குவது குறித்து நவனீதம்பிள்ளையுடன் ஏற்கனவே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தீர்மானத்திற்கு நோர்வே ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக