30 மே 2014

இந்திய பயணத்துக்கு பின் மிரளும் இலங்கை!

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் டெல்லி பயணத்துக்குப் பின்னர் அந்த அரசு மிகவும் மிரண்டு போயிருப்பதை அந்நாட்டு அமைச்சர் நிமல சிறிபால டி சில்வாவின் நேற்றைய பேட்டியும் வெளிப்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே டெல்லி வந்திருந்தார். அவருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி ஈழத் தமிழர் பிரச்சனை,. மீனவர்கள் பிரச்சனை குறித்து காட்டமாகவே விவாதித்திருந்தார். இதைத் தொடர்ந்து இலங்கைக்குப் போன உடனேயே இந்தியாவின் சம்பூர் அனல்மின் திட்டத்தை உடனே விரைந்து முடிக்க வேண்டும் என்று ட்விட்டர் வழியே ராஜபக்சே கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து இலங்கை அமைச்சர் நிமல சிறிபால டி சில்வா கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், இந்திய அரசின் வெளியுறவுத் துறை செயலர் வெளிப்படையாக அளித்த பேட்டியிலேயே 13வது அரசியல் திருத்தம் மற்றும் அதற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு காண்போம் என்ற உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்று இலங்கையை வலியுறுத்தியதாக சொல்லியிருக்கிறார்களே.. உங்கள் கருத்து என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு நேரடியாக பதிலளிக்காத நிமல சிறிபால டி சில்வா, இந்திய பாரதிய ஜனதாவால் இலங்கை அரசுக்கு பிரச்சனைகள் உருவாகியிருப்பதாக சில ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன. முந்தைய காங்கிரஸ் அரசை கையாண்டதைப் போல இலங்கை அரசு இப்போது செயல்பட முடியாது என்று சில ஊடகங்கள் சொல்கின்றன. இன்னும் சில ராஜபக்சேவின் அரசாங்கமே இல்லாமல் போய்விடும் என்கின்றன. ஆனால் இலங்கை அதிபருக்கும் இந்திய பிரதமருக்கும் இடையேயான முதலாவது சந்திப்பு வெற்றிகரமாக இருந்தது. இருநாட்டு நல்லுறவை வலுப்படுத்துவதாக அமைந்தது. இலங்கையின் நிலைப்பாட்டை இந்திய பிரதமர் மோடியிடம் ராஜபக்சே விளக்கினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததையும் காதுகொடுத்து ராஜபக்சே கேட்டுக் கொண்டார். எங்களைப் பொறுத்தவரையில் பிரச்சனைகளுக்கு பேச்சுகள் மூலம் தீர்வு காண விரும்புகிறோமே தவிர முரண்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் மூலம் அல்ல. இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் சுஷ்மா ஸ்வராஜ், யுத்தம் முடிந்த காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக வந்திருக்கிறார். இலங்கை நிலவரங்களை அவர் நன்கு அறிந்திருக்கிறார் என நம்புகிறோம் என்றார். ரொம்பவே மிரண்டு கிடக்கிறதோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக