09 ஜூலை 2012

ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தமிழர்களை கொன்ற அரசு கைதிகளையும் சாகடிக்கிறது!

newsஒரு இலட்சத்து 50 ஆயிரம் தமிழ் மக்களைக் கொன்ற அரசு இன்று தமிழ் அரசியல் கைதிகளையும் அடித்து முறித்துப்படு கொலை செய்கிறது என்று பொது எதிரணிக்கட்சிகளின் சார்பில் விக்கிரமபாகு கருணாரட்ண குமுறியுள்ளார்.
வடக்கில் தேர்தல் நடத்தினால் நூற்றுக்கு ஐந்து சத வீதமான வாக்குகள் கூட அரசுக்குக் கிடைக்கா. இருப்பினும், அது நூற்றுக்கு இருபத்தைந்து சதவீத வாக்குகளைப் பெற்று வரும் எனத் தெரிவித்த பொது எதிரணிக்கட்சிகள், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில்கள்ள வாக்குப் போடுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் எனத் தேர்தல் ஆணையாளர் கூறியது அரசுக்குப் பொருந்தும் எனவும் தெரிவித்தன.
தமிழ் பேசும் மக்கள் இந்த அரசை ஏற்கவில்லை யென்பதை கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டும் எனவும் அவை மேலும் தெரிவித்தன.
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற பொது எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவை மேற்கண்டவாறு தெரிவித்தன.
இதன் போது, கருத்துத் தெரிவித்த நவ சமசமாஜச் கட்சித் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்தன கூறியவை வருமாறு:
அரசியல் கைதிகளை அரசு கடுமையாகத் தாக்கி கொலை செய்கின்றது. இந்தச் சம்பவத்தை நாம் கடுமையாக எதிர்ப்பதோடு, இதற்கு எதிராக நாடு முழுவதும் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுக்க உள்ளோம்.
இதனடிப்படையில் ஒரு மாதத்திற்கு நான்கு அரச எதிர்ப்பு ஆர்பாட்டங்களை முன்னெடுக்க நாம் தீர்மானித்துள்ளோம். இந்தப் போராட்டங்கள் சாதாரண போராட்டங்கள் அல்ல. தற்போது ஆட்சியிலுள்ள அரசைக் கவிழ்த்து, விரட்டியடிப்பதற்கான போராட்டங்களேயாகும். அதற்காக நாடு முழுவதிலுமுள்ள மக்களை ஒன்றுதிரட்டி செயற்படுவோம்.
ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தமிழ் மக்களைக் கொன்ற அரசு இது. அதுமட்டுமல்லாமல், முஸ்லிம் பள்ளிவாசலை உடைத்த அரசுதான் இது. இந்த அரசை ஆட்சியிலிருந்து விரட்டியடிக்க வேண்டும். அதற்காக மிகவும் சிறப்பான முறையில் செயற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
அரசின் அராஜக செயல்களுக்கு எதிராக நாம் குரல்கொடுக்கும்போது, எம்மீது சேறுபூசும் வகையில் அது கருத்து வெளியிடுகிறது. அரச அடக்குமுறையின் உச்சக்கட்டமாக நாட்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்படுகின்றனர்.
அவர்களுக்கான சம்பளம் வெட்டப்படுவதுடன், அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி, சுகாதார சேவைகள் ஆகியனவும் தடைசெய்யப்படுகின்றன. அரசின் இந்தச் செயல்களுக்குப் பொது எதிரணியினர் என்றவகையில் நாம் எமது கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக