19 ஜூலை 2012

புலிக் கொடி ஏந்தும் ராஜபக்ஷ அரசு!

சிங்கள பிரிவினைவாத ராஜபக்ஷ அரசு வடக்கில் தமிழர்களை அடக்கி ஆளும் இராணுவ மயமாக்கலை முன்னெடுத்து வரும் நிலையில், வடக்கில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு புலி முத்திரை குத்தி அதனையும் அடக்க முனைகிறது.
நேற்று நெல்லியடியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் சிலரை புலிக் கொடி ஏந்தவைத்து ராஜபக்ஷ அரசு அடக்குமுறை மேற்கொண்டுள்ளது.
நிமலரூபன் படுகொலை, வடக்கில் காணி அபகரிப்பு என்பவற்று எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் முழுமையாக முகத்தை மூடிய நால்வர் இரு மோட்டார் சைக்கிளில் வந்து புலிக் கொடியை அசைத்து வட்டமிட்டு திரிந்துள்ளனர்.
புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதால் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது குற்றமாகும். இது வட, கிழக்கில் உள்ள பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு நன்கு தெரியும். ஆர்ப்பாட்டம் இடம்பெற்றபோது அங்கு 100 க்கும் மேற்பட்ட பொலிஸார் இருந்த நிலையில் புலிக் கொடி ஏந்தியவர்களை எவரும் கைது செய்யவில்லை. இது பாதுகாப்பு பிரிவின் திட்டம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் காண்டீபன் மற்றும் உபதலைவர் அனந்தராஜா ஆகியோர் வீட்டின் மீது கழிவு எண்ணெய் ஊற்றி சேதம் ஏற்படுத்தப்பட்டது.இவ்வாறான நிலையில் ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு பொலிஸார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் கோரியிருந்தனர். ஆனால் நிறுத்த முடியாது என கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்திருந்தார்.
பொது எதிர்க்கட்சியின் மே தின கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது புலிக் கொடி ஏந்திய ஒருவர் சென்றதை சுயாதீன தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ஆனால், அது குறித்து புகைப்படத்துடன் ஆதாரம் இருந்த போதும் புலிக் கொடி ஏந்திய நபரை கைது செய்ய முடியாது போயுள்ளது. அதுவும் பாதுகாப்பு பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட திட்டம் என தெளிவாகியுள்ளது.
(எக்ஸ் தமிழ் நியுஸ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக