26 ஜூலை 2012

இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தவே ஆட்கடத்தல் என்கிறது திவயின!

திவயின
இலங்கையில் வாழக் கூடிய பொருத்தமான சூழ்நிலை இல்லை என சர்வதேச சமூகத்திற்கு காணப்பிப்பதற்காக, புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் ஒருங்கமைக்கப்பட்ட திட்டம் குறித்த தகவல்கள் புலனாய்வுப் பிரிவுகளுக்கு கிடைத்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் பின்னணியில், இம்முறை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் சுரேஷ் குமார் என்பவர் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி, சென்றுக்கொண்டிருந்த புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஏற்றிய ஆழ்கடல் மீன்பிடி படகொன்று திருகோணமலை உப்புவெளி கடற்பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த படகில் பயணித்தவர்கள் தமது பயண பொதிகள் உள்ளிட்ட பொருட்களை கைவிட்டு, வேறு படகுகளில் தப்பிச் சென்றுள்ளனர். இந்த படகு குறித்து உப்புவெளி காவற்துறை பொறுப்பதிகாரி பிரகதி லக்மினவுக்கு கடைத்த தகவல் ஒன்றை அடுத்து, கடற்படையினரின் உதவியுடன் அந்த படகு கைப்பற்றப்பட்டது.
படகில் இருந்த பயண பொதிகளை சோதனையிட்ட போது, படகில் பயணம் செய்தவர்கள் புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளது. இவர்களுக்கு புனர்வாழ்வு முகாம்களில் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் உள்ளிட்ட பல ஆவணங்கள் பயண பொதிகளில் இருந்துள்ளன. அத்துடன் ஒரு மாதத்திற்கு தேவையான உணவு பொருட்களும் படகில் இருந்துள்ளன.
புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற விடுதலைப்புலி உறுப்பினர்களை சிறிய படகுகள் மூலம் ஆழ்கடல் மீன்பிடி படகுக்கு அழைத்துச் சென்ற பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணைகளின்படி இலங்கைக்கு கெட்டபெயரை ஏற்படுத்தும் இந்த திட்டம் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளன.
புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு இலங்கை அரசாங்கம் தொழில் வாய்ப்புகளையோ, வசிப்பதற்கு வீடுகளையோ வழங்காது, அவர்களை கடும் சிரமங்களுக்கு உட்படுத்தியுள்ளதாக சர்வதேச சமூகத்திற்கு வெளிகாட்ட இவர்கள் முயற்சித்துள்ளனர்.
சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்லும் நபர்கள் தொடர்ந்தும் கைதுசெய்யப்பட்டு வரும், நிலையில், இலங்கைக்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில், இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் திட்டமிட்ட சிலர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக