04 ஜூலை 2012

காணாமல் போனோர் தொடர்பில் செஞ்சிலுவைச் சங்கம் கேள்வி!


சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும், காணாமற்போன 15,780 பேரின் நிலை என்ன என்று தெரியாத நிலை நீடிப்பதாக அனைத்துலக செஞ்சிலுவைக் குழு கவலை வெளியிட்டுள்ளது.
அனைத்துலக செஞ்சிலுவைக் குழு ஜெனிவாவில் வெளியிட்டுள்ள 2011ம் ஆண்டுக்கான அறிக்கையிலேயே இதுகுறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009ம் ஆண்டு மே மாதம் முடிவடைந்ததாக சிறிலங்கா இலங்கை அரசு அறிவித்தது.
ஆனாலும், சிறிலங்காவில் போருக்குப் பின்னர் இன்னும் 15,780 பேரில் நிலை என்னவானது என்று தெளிவில்லாமல் உள்ளது.
காணாமற்போனவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் 751 பேர் பெண்கள், 1494 பேர் சிறுவர்களாவர்.
போர் முடிந்த பின்னர், இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்த பெரும்பாலானவர்கள் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், இன்னும் ஆயிரக்கணக்கானோரின் நிலை கேள்விக் குறியாகவே உள்ளது.
போர் நடைபெற்ற பகுதிகளில் மனிதாபிமானப் பணியாளர்களுக்கு சிறிலங்கா அரசினால் கடும் அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.
அங்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் பயணத்தடை விலக்கிக் கொள்ளப்பட்டாலும், மனிதாபிமானப் பணியாளர்கள் சுதந்திரமாகச் சென்று வர முடியாதுள்ளது.
கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டே அவர்கள் அங்கு செல்ல வேண்டியுள்ளது.
சிறிலங்கா அரசு 2010 ஆம் ஆண்டு பிறப்பித்த ஒரு உத்தரவை அடுத்து வடக்கில் இருந்து அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் பணியகங்கள் மூடப்பட்டன.
இதனால், பொதுமக்களுக்கான உதவி நடவடிக்கைகள் நின்று போயின.
மீள்குடியேற்றப் பகுதிகளில் திட்டமிட்டப்பட்டிருந்த குடிநீர் விநியோகத் திட்டங்களை செயற்படுத்துவதையும் கூட சிறிலங்கா அரசு தடை செய்தது.
பொதுமக்களின் நலன்களை தொடர்ச்சியாக கண்காணிப்பதற்கும் சிறிலங்கா அரசு அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவுக்குத் தடை விதித்துள்ளது“ என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக