11 ஜூலை 2012

அரசுக்கு முண்டுகொடுத்து அரசியல் தீர்விற்கான வாய்ப்பை சிதறவிடக்கூடாது!


தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சினைக்கு நிலைத்து நிற்கக்கூடிய நியாயமான அரசியல் தீர்வு ஒன்று காணப்படுவதை சர்வதேச சமூகம் பொறுப்பேற்றுள்ள இந்த தருணத்தில் அந்த வாய்ப்பை சிதறடிப்பதற்கு அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கக் கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தான் வலியுறுத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அத்துடன் எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெறுவதற்கு உதவக்கூடாது என்றும் வலியுறுத்தியதாக அவர் இன்று செவ்வாய்க்கிழமை மாலை குறிப்பிட்டார்.
எதிர்வருகின்ற கிழக்கு மாகாண சபையின் தேர்தல் தொடர்பாக திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உப தலைவர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களில் பதவி வகிக்கும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போதே சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
"கிழக்கு மாகாண சபை தேர்தல் தமிழ்ப்பேசும் மக்களின் பிரச்சனை சர்வதேச மயமாக்கப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் சந்திக்க போகும் முதலாவது ஜனநாயக சோதனையாகும்.
இச்சோதனையில் தமிழ் பேசும் மக்கள் வெற்றியிட்ட வேண்டும். அவ்வெற்றி தேர்தலில் போட்டியிடும் ஆளும் கட்சியில் இடம்பெறும் ஒரு தமி;ழ் வேட்பாளர் கூட வெற்றி பெற முடியாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.
வெற்றி பெறும் தமிழ் உறுப்பினர்கள் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களாக இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். தமிழ் மக்கள் இதனை தனது தலையாய கடமையாக எடுத்துக்கொண்டு செயற்பட வேண்டும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக