05 ஜூலை 2012

அன்றே இவர்களை கொன்றிருக்க வேண்டும்"வவுனியா கைதிகள் தொடர்பில் கோத்தபாயவின் வெறிப்பேச்சு!

கோத்தபாய 
இராணுவத்திடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்களை அன்றே கொலை செய்திருந்தால் இன்று இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது என கோத்தபாய கடித்துக் கொண்டதாக ஒரு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சிறைக்காவலர்களை பணயமாக கைதிகளினால் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கோத்தபாய, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவைக் கண்டித்துள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இச்செயற்பாடு புலம்பெயர் விடுதலைப் புலிகளின் பிரிவுக்கு, அந்த அமைப்பு இன்னும் செயற்பாட்டு நிலையில் உள்ளது என்ற உணர்வை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா வன்னிப் போர் நடவடிக்கையின் போது 55 மற்றும் 59 ஆவது டிவிசன்களுக்குத் தலைமை தாங்கியவர்.
இந்த இரு படைப்பிரிவுகளும் வெற்றிலைக்கேணியில் இருந்தும், முல்லைத்தீவில் இருந்தும் நகர்வுகளை மேற்கொண்டிருந்தன. 59 ஆவது டிவிசனால் கைது செய்யப்பட்ட கடற்புலித் தலைவரான சசிக்குமார் என்பவரே, கடந்தவாரம் வவுனியா சிறைக் கலவரத்துக்குத் தலைமை தாங்கியிருந்தார்.
வன்னிப் போர் நடவடிக்கையின் போது, கைது செய்யப்படும் அல்லது சரணடையும் விடுதலைப் புலிகள் இயக்கச் செயற்பாட்டாளர்கள் அனைவரையும் கொன்று விடும்படி கோத்தாபய ராஜபக்ச தனிப்பட்ட ரீதியாக எல்லாப் படைப்பிரிவுகளினது தளபதிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண தலைமையிலான நந்திக்கடல் பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 53 ஆவது டிவிசன், கைது செய்த சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவைச் சேர்ந்த 303 புலிகள் கொலை செய்யப்பட்டனர்.
வன்னிப் படை நடவடிக்கையின் போது, புலிகளின் உயர்மட்டத் தலைவர்களும் கூட கொலை செய்யப்பட்டனர். சாதாரண போராளிகள் மட்டும் சிறிலங்கா காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். போரின் இறுதிக்கட்டத்தில் வெள்ளைக் கொடியுடன் சரணடைய முன்வந்த புலிகளின் தலைவர்கள் நடேசன், புலித்தேவன் போன்றோரை 58 ஆவது டிவிசன் தளபதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா படுகொலை செய்திருந்தார்.
எனினும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் அந்த உத்தரவைப் பின்பற்றவில்லை. அவர் கைது செய்த ஒவ்வொரு புலிகள் பற்றிய விபரங்களையும் பதிவு செய்து, எழுத்துமூல, ஒளிப்படப் பதிவுகளுடன் சிறிலங்கா இராணுவக் காவல்துறையிடம் ஒப்படைத்திருந்தார். என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எனினும், இறுதிக்கட்டப் போரின் போது பொதுமக்கள் மீதான பீரங்கித் தாக்குதல்கள், நீதிக்குப் புறம்பான படுகொலைகள் உள்ளிட்ட போர்க்குற்றங்களை புரிந்தாக மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா குற்றம்சாட்டப்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மீது பிரித்தானியாவில் போர்க்குற்ற வழக்குப் பதிவு செய்யப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், லண்டனில் இருந்து சிறிலங்கா திரும்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக