29 ஜூலை 2012

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது.

நல்லிணக்க ஆணைக்குழு
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதனை சர்வதேசத்துக்கு உணர்த்தும் வகையில், கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
அந்த அறிக்கையை நடை முறைப்படுத்துவதற்கான திட்டம் சர்வதேசத்தை ஏமாற்றும், நேரத்தை வாங்கும் முயற்சியே. தமிழர்களின் இருப்பை இல்லாது ஒழிக்கும் அரசின் திட்டத்தை சர்வதேசத்துக்கு உணர்த்த கிழக்குத் தேர்தலை கூட்டமைப்பு பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு வடக்கு கிழக்கைச் சேர்ந்த மருத்துவர்கள் 21, பேராசிரியர்கள் 6, விரிவுரையாளர்கள் 10, பொது அமைப்புகளில் அங்கம் வகிப்பவர்கள் 23, கல்வித்துறை சார்ந்தோர் 2, கிறிஸ்தவ மதகுருக்கள் 9, சட்டத்தரணிகள் 10, வங்கியாளர் 1, ஓய்வுநிலை அரச ஊழியர் 7, பல்கலைக்கழக மாணவர்கள் 8 மற்றும் ஆயர் ஒருவர் அடங்கிய 98 பேரைக் கொண்ட சிவில் சமூகம் விடுத்த அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் 15 பேர் கிழக்கைச் சேர்ந்தவர்கள்.
அறிக்கையின் விவரம் வருமாறு:
தமிழர்கள், ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் அதன் கீழான மாகாண சபை முறைமையையும் தமது அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் தன்மையற்றது என தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்துள்ளனர். எமது தாயகத்தில் கடந்த காலத்தில் இரண்டு முறை (1989, 2008) நடந்த மாகாண சபைத் தேர்தல்களை தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் புறக்கணித்திருந்தன. அரச சார்புத் தமிழ்க் கட்சியொன்றினால் சுயாதீனமாக நடத்த முடியாத மாகாண சபையை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சியொன்று சுயாதீனமாக நடத்த முடியாது என்பதில் சந்தேகமிருக்க முடியாது.
ஆளுநரதும் மத்திய அரசினதும் பிடியில் உள்ள மாகாண சபை முறைமையைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்பதை 1989 மற்றும் 2008 இல் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தம் வசம் வைத்திருந்த அப்போதைய முதலமைச்சர்கள் தெளிவாக அவ்வப்போது சொல்லியுள்ளனர்.
தேர்தல்களில் பங்குபற்றுவது என்பது ஓர் அரசியல் இலக்கை எய்துவதற்கான கருவியாக இருக்குமிடத்து அவற்றில் பங்கு பற்றுவது சரியாக இருக்கும். மாறாக அவ்வாறாகப் பங்கெடுப்பதானது எடுத்துக் கொண்ட அரசியல் இலக்குகளுக்கு பாதகமாக இருக்குமிடத்து மாற்றுபாயங்களைப் பற்றிச் சிந்திப்பதும் எம்மீது திணிக்கப்படும் ஓர் தேர்தலை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பில் முன்யோசனையுடனும் தூர நோக்குடனும் செயற்படுவதும் இற்றைக் காலத்தில் தமிழ்த் தேசிய அரசியலின் முன்னகர்வுக்கு அத்தியாவசியமானது.
தமக்கெதிராக இழைக்கப்படும் அட்டூழியங்களுக்கெதிராகத் தமது எதிர்ப்பைக் காட்டுவதற்கு மக்கள் தேர்தல்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அங்கலாய்க்கின்றமை இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இன்றியமையாததாகும்.
இந்த அடிப்படையில் சில முன்மொழிவுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்வைக்கிறோம்.
*தற்போதைய ஒற்றையாட்சி அரசமைப்பும் அதன் கீழான மாகாண சபை முறைமையும் நிராகரிக்கப்பட வேண்டும். 13 ஆவது திருத்தமானது அரசியல் தீர்வுக் கான ஆரம்பப் புள்ளியாகக் கூட ஏற்கப்பட முடியாதது.
*வடக்குக் கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகமாகும். எந்தவொரு அரசி யல் தீர்வும் இணைந்த வடக்கு கிழக்கை ஓர் அலகாக அங்கீகரிப்பதாக அமைய வேண்டும். இந்த விடயம் தொடர்பில் குறிப்பாக முஸ்லிம் மக்களது நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வது முக்கியமான தாகும். தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து வேலை செய்தல். இவ் விரு சமூகத்தினதும் இருப்பைத் தக்க வைத்துக்கொள்வதற்கு இன்றியமையாததாகும்.
*நீடித்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வொன்று தமிழர்களது தேசம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை அங்கீகரிப்பதனூடாகவே வரும். இவற்றை அங்கீகரிக்காத எந்தவொரு அரசியல் செயன்முறையும் பிரயோசனமற்றது.
*ஜெனிவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நான்கு மாதங்கள் கடந்துள்ள நிலையில் தமிழருக்கெதிரான அநியாயங்களும் அடக்கு முறைகளும் பெருகியுள்ளனவே அன்றி குறையவில்லை.
தமிழரது நிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுதல், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாகத் தடுப்பில் வைக்கப்பட்டிருத்தல், காணாமற்போனோர் தொடர்பில் தொடர்ச்சியாக எந்தவித முன்னேற்றமும் இல்லாதிருத்தல், தமிழ்த் தேசியத்தின் பொருளாதார, கலாசார அடிப்படைகள் சீரழிக்கப்படுதல், அன்றாட வாழ்க்கையில் இராணுவத்தினரின் தலையீடுகள் அதிகரித்தல், கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடி ஆகிய அனைத்துத் துறைகளினது தனித்துவங்களை சீரழிக்கும் வகையில் அரசியல்வாதிகளின் தலையீடு அதிகரித்தல், உயர் பாதுகாப்பு வலயங்கள் நிரந்தரமாக்கப்படல் (சம்பூர் உயர் பாதுகாப்புவலயம் உட்பட), இடம்பெயர்ந்த மக்களில் குறிப்பிடத்தக்க தொகையினர் தொடர்ச்சியாக முகாம் வாழ்வில் இன்றும் அல்லற்படல், மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் புறக்கணிக்கப்படல் போன்றன தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அனுபவிக்கும் இன்னல்களுக்கு உதாரணங்கள்.
மேலும் தமிழருக்கெதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழரது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்பதைச் சர்வதேச சமூகம் உணர வேண்டும். அந்த அறிக்கையும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டமும் சர்வதேசத்தை ஏமாற்றும், நேரத்தை வாங்கும் முயற்சியே. மேலும் அவ்வாறாகக் கிடைக்கும் நேர இடைவெளிக்குள் தமிழர்களது இருப்பை முற்றாக இல்லாதொழிப்பதற்கு அரசு திட்டமிடுகின்றது என்பதைச் சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
மேற்படி விடயங்களை வலியுறுத்தி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்தக் தேர்தல்களில் பங்குபற்றுவதனூடாகத் தமிழர்கள் பிரிந்த வடக்குக் கிழக்கை அங்கீகரித்துவிட்டனர், மாகாண சபை முறைமையை ஏற்றுக் கொண்டு விட்டனர் என்ற வாதத்தின் செறிவை ஓரளவேனும் குறைக்கலாம் என எண்ணுகின்றோம். மாகாண சபை முறைமையையும் பிரிந்த வடக்குக் கிழக்கையும் நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை சர்வதேச சமூகத்திற்கு உணர்த்துதல் இன்றியமையாததாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக