
மேற்படி கருத்தரங்கில் கனடாவிலும் அமெரிக்காவிலும் இருந்து சென்றவர்கள் பங்கு கொண்டார்கள். நாடு கடந்த அரசாங்கத்தின் கனடாவிற்கான அங்கத்தவர் நிமால் விநாயகமூர்த்தி மேற்படி கருத்தரங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாடு கடந்த அரசின் உண்மையான நோக்கங்களை நமது மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். முதலாவதாக தமிழ் மக்கள் தற்காலத்து அரசியல் விஞ்ஞானத்திற்கு அளித்த மரியாதை என்றுதான் நான் நாடு கடந்த அரசாங்கத்தை கூறுவேன்.
தமிழ் மக்கள் தாங்கள் ஜனநாயக விழுமியங்களுக்கு கொடுத்த மரியாதையும் இதுதான். நாடு கடந்த அரசாங்கம் தாயகத்தில் வாழும் தமிழர்களும் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள தமிழர்களும் இணைந்துள்ளனர். அத்துடன் தமிழீழம் என்ற கோட்பாட்டை மிகுந்த உயிர்த்துடிப்புடன் பேணிவருவதும் நமது நாடு கடந்த தமிழீழ அரசு.
உதாரணமாக நமது தாயகத்தில் நமது மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடி வீர மரணமடைந்த நமது போராளிகள் மற்றும் போராளித் தலைவர்களின் நினைவாக நாம் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யக்கூட இலங்கை அரசு தடை விதிக்கின்றது.
ஆனால் இலங்கையில் ஆயுதப் புரட்சி செய்து மரணித்த மக்கள் விடுதலை முன்னணியின் கொல்லப்பட்ட போராளிகளின் நினைவாக இலங்கையில் அரச அனுமதி கிடைக்கின்றது. எனவே இவ்வாறான நினைவஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்தி மறைந்த போராளிகளுக்கு மரியாதை செய்யவும் அதற்கான நிகழ்வுகளை நடத்தவும் நமது நாடுகடந்த அரசாங்கம் முயன்று வருகின்றது.
மேலும் நாடு கடந்த அரசாங்கத்திற்கு உலகில் பெரும்பாலான நாடுகளின் ஆதரவோ அன்றி அங்கீகாரமோ இல்லை. இவ்வாறு நமக்கு அங்கீகாரம் இல்லை என்பதை அறிந்து கொண்டு நாம் இயங்காமல் இருந்து விட முடியாது.
அந்தந்த நாடுகளின் விருப்பு வெறுப்புகளுக்கு நாம் ஆளாகி விட முடியாது. அவர்கள் விரும்பவில்லை என்பதற்காக நாம் போராடாமல் இருக்க முடியாது.
பேச்சுவார்த்தைகளின் போது இடைக்கால முயற்சியாகவும் தமிழீழத்தை நோக்கிய போராட்டத்திற்கு ஒரு உந்து சக்தியாகவும் நாம் சர்வதேச பாதுகாப்பு பொறிமுறை ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளோம் என்பதையும் நான் எமது தமிழ் மக்களுக்கு சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.
முள்ளிவாய்க்காலில் நமது மக்களுக்கு எதிராகவும் நமது போராளிகளுக்கு எதிராகவும் 2009 ம் ஆண்டு கொடிய யுத்தம் நடைபெற்றபோது, முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல உலகம் முழுவதுமே போராட்டக் களங்களாக மாறியிருந்தன.
தமிழகத்தில் கூட பல போராட்டங்களை நமது உறவுகளுக்காக அங்குள்ள தலைவர்களும் தமிழ் நாட்டு மக்களும் நடத்தினார்கள் என்பதை நாம் மறந்து விட முடியாது.
மேலும் தாயகத்தில் தற்போது அரசாங்கத்தின் நில அபகரிப்புக்கு எத்pராக நடைபெறும் பல போராட்டங்களுக்கு உலகெங்கிலம் பல ஆதரவுப் போராட்டங்கள் நடைபெற்றவண்ணம் உள்ளன. இலங்கையில் பல சமயங்களைச் சேர்ந்த மக்களும் நமது போராட்டங்களுக்கு தங்கள் ஆதரவைத் தருகின்றனர் என்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது.
எனவே நமது நாடு கடந்த தமிழீழ அரசாங்த்திற்கு புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் பேராதரவைத் தரவேண்டும். ஒரு பலமுள்ள அமைப்பாக நமது அரசு உலகின் கண்களுக்கு தெரியும் ஒரு நாளுக்காக நாம் மேலும் உறுதியுடன் போராட வேண்டும் என தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக