30 ஜூலை 2012

ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு சாகடிக்கப் பட்டுள்ளது - அதனால் நீதிமன்ற உத்தரவின் பிரதியை கிழித்தேன்.

ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு உள்ளது. ஜனநாயகம் சாகடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தே நீதிமன்ற உத்தரவின் பிரதியை தான் கிழித்தெறிந்ததாக முன்னாள் நாடாளுமன்ற அங்கத்தவரும் ரெலோ அமைப்பின் அரசியல் தலைவருமான கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று வழங்கிய வாக்குமூலத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதித்து யாழ். நீதிமன்றம் உத்தரவொன்றை அப்போது பிறப்பித்திருந்தது.
எனினும் அதனை வன்மையாக கண்டித்த கே.சிவாஜிலிங்கம் ஆர்ப்பாட்டத்தில் வைத்தே நீதிமன்ற உத்தரவின் பிரதியை கிழித்தெறிந்திருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டிருந்தது.
இச்செயல் நீதிமன்றை அவமதிப்பதாக குற்றஞ்சாட்டி அவரிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கொன்றை யாழ்.பொலிஸார் தாக்கல் செய்துள்ளனர்.
இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்காள்ளப்பட்ட வேளையில் இன்று நீதிமன்றில் நேரில் ஆஜராகியிருந்த கே.சிவாஜிலிங்கம் தொடரும் சட்டத்தரணிகளது பணி புறக்கணிப்பை காரணம் காட்டி மூத்த வழக்கறிஞரான சிறிகாந்தா தமது சார்பில் இன்று நீதிமன்றில் ஆஜராக இருந்த போதும் இன்று அவர் வருகை தர முடியாதிருப்பதால் தவணை கோரியிருந்தார்.
இதையடுத்து விசாரணைகளை எதிர்வரும் ஆகஸ்ட 20ம் திகதிக்கு நீதிபதி மா.கணேசராஜா ஒத்திவைத்திருந்தார்.
அவ்வேளையில் அங்கு ஆஜராகியிருந்த யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிவாஜிலிங்கத்திடமிருந்து வாக்கு மூலமொன்றை பதிவு செய்ய அனுமதி கோரியிருந்தார்.
அதையடுத்து அவரது வாக்கு மூலத்தை பதிவு செய்ய நீதிபதி பணிப்பினை பிறப்பித்திருந்தார்.
யாழ்.பொலிஸ் நிலயத்திற்கு நேரில் சமூகமளித்திருந்த கே.சிவாஜிலிங்கம் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் சாகடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தே நீதிமன்ற உத்தரவின் பிரதியை தான் கிழித்தெறிந்ததை ஒத்துக்கொண்டு வாக்கு மூலமளித்திருந்ததாக செய்தியாளர்களிடம் பின்னர் தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக