17 ஜூலை 2012

கூட்டமைப்பு சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் போட்டி.

கிழக்கு மாகாணசபை தேர்தலில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் போட்டியிட உள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைராசசிங்கம் ( சட்டத்தரணி) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் ( ஜனா) ஆகியோர் போட்டியிட உள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசசிங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக போட்டியிட உள்ளார். 1989ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டுவரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கருணாகரன் ( ஜனா) ரெலோ சார்பில் போட்டியிட உள்ளார். லண்டனில் வசித்து வந்த ஜனா தற்போது மட்டக்களப்புக்கு சென்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேர்தல் களத்தில் குதித்துள்ளார். ரெலோ சார்பில் இந்திரகுமார் பிரசன்னாவும் போட்டியிட உள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் போட்டியிட உள்ளார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியல் நாளை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சங்கர் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட உள்ளனர். சுவிஸில் அகதி தஞ்சம் கோரி கடந்த 5வருடங்களாக சுவிஸில் வாழ்ந்து வந்த சங்கர் அண்மையில் இலங்கைக்கு சென்றிருந்தார். அவர் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட உள்ளார்.
அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் போட்டியிட உள்ளார். இவர் ரெலோவின் செயலாளராவார். அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நேசன் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் போட்டியிட உள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் இரு முஸ்லீம்களும் இடம்பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக