01 ஜூலை 2012

தமிழ் மக்களுக்கெதிரான முழுமையான போர் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது!

போர் முடிந்து விட்டதாகக் கூறப்பட்ட போதும், தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு முழுமையான போர் தற்பொழுது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது என்பதை தற்போது நடைபெறும் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன என்று அதி வணக்கத்திற்குரிய மன்னார் மறைமாவட்ட பேராயர் இராயப்பு யோசேப் அவர்கள் தெரிவித்தார்.கொழும்பிலிருந்து வெளிவரும் பிரதான தமிழ் வார பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் தாம் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழ்வதாக தெரிவித்த கருத்துடன் நூற்றுக்கு நூறு வீதம் தாமும் உடன்படுவதாக தெரிவித்த பேராயர் அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான தற்போதைய போரானது தமிழ் மக்களின் இன அடையாளத்தை அழித்து ஒழிப்பதும் அவர்களின் சுய கௌரவத்தை, பாதுகாப்பை, அரசியல் இருப்பை சிதைத்து விடும் நோக்குடனேயே இந்தப் போர் தமிழ் மக்களுக்கு எதிராக உத்தியோகப் பற்றற்ற முறையில் பிரகடனப்படுத்தப்பட்டு முன் நகர்த்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் இன்று தமிழ் மொழியையே அறியாது சிங்களமயமாகியுள்ளதை சுட்டிக்காட்டும் பேராயர் அவர்கள் இதுபோன்றதொரு நிலையை வடக்கு - கிழக்கில் உருவாக்குவதற்கான திட்டங்களே முன் நகர்த்தப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
இது சர்வதேச நியமங்கள், நீதி இவற்றிற்கு மாறான இனச் சுத்திகரிப்பே என்பதில் எவ்வித கருத்து வேறுபாடுகளுக்கும் இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த யூன் 23ம் திகதி முதல் 27ம் திகதி வரை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் போன்ற பகுதிகளில் உள்ள மக்களுடனான சந்திப்பின் போது வெளிப்படுத்திய உணர்வுகள், கேள்விகள் குறித்து தற்பொழுது மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் பேராயர் அவர்களிடம் கேள்விகளாக முன்வைத்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாரம்பரியமாக வாழ்ந்துவரும் மக்களை அவர்களுடைய பிரதேசத்தில் சிறுபான்மையினராக மாற்றும் திட்டத்தை அனுமதிக்கமுடியாது.
சமாதான காலத்தில் படைத்தரப்பைப் பலப்படுத்த வேண்டிய தேவை அதிகளவில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
சமாதானம் வந்துவிட்டதாக கூறுகின்றனர், ஆனால் சமாதானத்தை தமிழ் மக்களால் பார்க்க முடியாதிருக்கின்றது.
முள்ளிக்குளத்திலும், பேசாலை 50 வீட்டுத் திட்டத்திலுமிருந்து மக்களைப் படைத்தரப்பு ஏன் விரட்டியடித்தது?
மக்கள் மீளக்குடியமர முடியாதுள்ளது. காடுகளிலும், கூடாரங்களிலும் எவ்வளவு காலத்துக்கு வாழ்வது?
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக