21 ஜூலை 2012

நிமலரூபன் குறித்து பாராளுமன்றில் கேட்கக்கூடாதாம்!சிங்கள இனவாதியின் கூச்சல்.

தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் இறப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார,நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சபையில் கேள்வியெழுப்புகையில்,இது பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புபட்டகைதி குறித்தான கேள்வி.
எனவே, இதற்குச் சந்தர்ப்பம் வழங்கக்கூடாது என்று பிரதிக் கல்வி அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சா தெரிவித்தார்.நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம்,சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரிடம் கேள்விகளை எழுப்பியிருந்தார்.
அந்தச் சமயத்தில் புனர்வாழ்வு,சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரோ அல்லது அதன் பிரதி அமைச் சரோ சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை. இதனால், நாடாளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு ஆளுந்தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன பதிலளித்தார்.
அத்துடன்,அகிலவிராஜின் மேலதிக கேள்விகளுக்கு முன்னாள் சிறைச்சாலைகள் பிரதி அமைச்சராகப் பதவிவகித்தவர் என்ற அடிப்படையில் பிரதிக் கல்வி அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சா பதில் அளிப்பார் என்று கூறி அமர்ந்துவிட்டார்.
இதனையடுத்து,தனது மேலதிக இரண்டு கேள்விகளை அகிலவிராஜ் பிரதிக்கல்வி அமைச்சரிடம் எழுப்பினார்.வெலிக்கடைச் சிறையில் இருக்கின்ற 75 பெண் கைதிகளுக்கு இரண்டு குளியலறைகள்தான் இருக்கின்றன எனவும்,அதனால் அவர்கள் பல இன்னல்களைச் சந்திக்கின்றனர் எனவும் இதன் போது அகிலவிராஜ் சுட்டிக்காட்டினார்.
அகிலவிராஜின் கேள்விகளைத் தொடர்ந்து இடைக்கேள்வியொன்றை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார,தாம் ஒரு கேள்வி கேட்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து கேள்வி எழுப்பினார்.
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கு ஒருமாத காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், தற்போது ஒரு மாதம்தான் கடந்துள்ளது. ஆனால் நடவடிக்கை எது வுமில்லை.
இந்தநிலையில், வவுனியா, மஹர போன்ற சிறைச்சாலைகளில் சில சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
தமிழ்க் கைதி நிமலரூபனின் மரணம் குறித்து அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? இந்த விடயத்தில் அரசின் கடப்பாடு எது என்று அஜித்குமார உரையாற்றிக் கொண்டிருந்த போது குறுக்கீடு செய்து எழும்பிய பிரதிக் கல்வி அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சா,
இவர் சாதாரண கைதி குறித்து கேள்வி எழுப்புவார் என எதிர்பார்த்தேன். ஆனால், பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய கைதிகள் குறித்து கேள்வி எழுப்புகிறார்.
இதற்குச் சந்தர்ப்பம் வழங்கக் கூடாது என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக