11 ஜூலை 2012

தமிழ்க்கைதிகளின் உறவுகள் ஐ.நாவுக்கு கடிதம்.

சிறைச்சாலைகளுக்குள் தங்களின் உறவுகள் எதிர் நோக்கும் அவலங்கள் குறித்து விளக்கியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனக் கோரி தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் சபைக்கு விரைவில் கடிதமொன்றை அனுப்பி வைக்கவுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் சிபார்சு செய்துள்ள போதிலும், இந்த விடயம் குறித்து அரசு காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் முன் னெடுக்கவில்லை எனவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்படவுள்ளது.
அத்துடன், தமிழ் அரசியல் கைதிகள் அண்மைக் காலமாக தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டுவரும் சம்பவங்கள் தொடர்பில் ஆதாரபூர்வமான தகவல்களை இந்தக் கடிதத்துடன் இணைக்கவுள்ள கைதிகளின் உறவுகள், தங்களின் உறவுகளின் விடுதலை விடயத்தில் சர்வதேசத்தினதும் மனித உரிமை அமைப்புகளினதும்
தலையீடு இன்றியமையாத தேவை எனவும் கடிதத்தினூடாக வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரிகள் மூவரைத் தமிழ்க் கைதிகள் சிறைப்பிடித்ததையடுத்து அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது. தமிழ்க் கைதிகளைச் சிறைச்சாலை அதிகாரிகள் மிகவும் கொடூரமான முறையில் தாக்கி அவர்களின் கை, கால்களை முறித்துள்ளனர். இதனால் கைதிகளின்
நிலைமை கவலைக்கிடமானது.
ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அவசர சத்திரசிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த கணேசன் நிமலரூபன் என்ற தமிழ் அரசியல் கைதி கடந்த புதன்கிழமை உயிரிழந்தார்.
நிமலரூபனுக்கு நேர்ந்த கதி தங்களது உறவுகளுக்கும் நேர்ந்துவிடுமோ என்ற அச்ச நிலைமை உருவாகியுள்ளதையடுத்தே தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியும், விடுதலையை வலியுறுத்துமாறு குறிப்பிட்டும் தமிழ்க் கைதிகளின் உறவுகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் மனித உரிமைகள் சபைக்குக் கடிதம் ஒன்றை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக