25 ஜூலை 2012

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழரை அவுஸ்திரேலியா நாடு கடத்தியது!

அகதி அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவரை அவுஸ்திரேலியா நேற்று நாடுகடத்தியுள்ளது.
30 வயதான தயான் அந்தனி எனும் இந்நபர், மெல்பேர்னின் தென்கிழக்கிலுள்ள டான்டேநோங்கில் தனது சகோதரியுடன் வசித்துவந்ததாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை, மெல்பேர்னிலுள்ள அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்திற்கு அவர் அழைக்கப்பட்டு, அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றபடுவதற்கான அதிகாரிகளின் தீர்மானம் குறித்த கடிதம் கையளிக்கப்பட்டது.
மெல்பேர்ன் மெரிபிர்னோங் தடுப்பு முகாமில் வைக்கப்பட்ட அவர், மெல்பேர்னுக்கு அருகிலுள்ள டுல்லாமரைன் விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு அனுப்பப்படுவதற்காக பேங்கொக் செல்லும் விமானமொன்றில் அவுஸ்திரேலிய நேரப்படி நேற்று புதன்கிழமை பிற்பகல் 2.35 மணியளவில் ஏற்றப்பட்டதாக 'தி அவுஸ்திரேலியன்' பத்திரிகை தெரிவித்துள்ளது.
இவர் 2010 ஆம் ஆண்டு விமானம் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றதாகவும், தமிழீழ விடுதலைப புலிகளுடன் தொடர்புபட்டிருந்தமைக்காக, ம் இவருக்கு எதிராக 2011 பெப்ரவரி மாதம் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாடு கடத்தப்படுவதற்கு எதிராக, சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. விசேட அறிக்கையாளரிடம் மேன்முiறீயீடு செய்யப்பட்ட நிலையில் இவர் நாடுகடத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவுஸ்திரேலிய நீதிமன்றமொன்றிடம் இந்த நாடு கடத்தலுக்கு எதிரான உத்தரவைப் பெறுவதற்கு அகதிகள் விவகார வழக்குரைஞர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் தீவிரமடைந்ததையடுத்து 2008 ஆம் ஆண்டு முதல் அகதிகள் வருகை தீவிரமடைந்ததபின், அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் முதலாவது இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் இவர் என நம்பப்படுவதாக 'சிட்னி மோர்னிங் ஹெரால்ட்' பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதற்கு முன் திருப்பி அனுப்பப்பட்ட ஏனைய இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள், படகுகளை வழிமறிக்குமாறு அவுஸ்திரேலியா கோரியபின் இந்தோனேஷியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்கள் அல்லது சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படக்கூடிய சுமார் 150 தமிழர்களில் நாடு கடத்தப்படும் முதலாவது நபராக இவர் இருக்கலாம் எனவும் அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக