06 ஜூலை 2012

நிமலரூபன் படுகொலை வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கம்.

தமிழ் அரசியல் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் மோசமாகத் தாக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்தமை குறித்து இலங்கையில் உள்ள வெளிநாட்டு இராஜ தந்திரிகளுக்கு கூட்டமைப்பு நேற்று விளக்கியுள்ளது. இலங்கையரசு மீது அழுத்தங்களை பிரயோகித்து கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்து மாறும் கூட்டமைப்பு இராஜதந்திரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கையிலுள்ள தூதரக அதிகாரிகள் ஆகியோருக்கு தமிழ் அரசியல் கைதிகளின் நிலை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது:
மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழ்க் கைதிகளின் மீதான சித்திரவதைகள், அடிப்படை மனித உரிமை மீறல்கள், அவர்களது விடுதலை தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வது எனவும் இங்குள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு உண்மை நிலையைத் தெரியப்படுத்தி மனுக்களைச் சமர்பிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைவாக நேற்று மாலை கொழும்பிலுள்ள தனியார் "ஹோட்டலில்" இடம்பெற்ற சந்திப்பிலேயே தமிழ்க் கைதிகளின் நிலை தொடர்பில் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது.
பொலிஸாரும், சிறைக்காவலர்களும் மூரக்கத்தனமாக தாக்கியதிலேயே கைதி மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இவரது உடலை அவரது சொந்த ஊரில் தகனம் செய்வதற்கு பொலிஸார் நீதிமன்றின் ஊடாக தடையுத்தரவினைப் பெற்றுள்ளனர். இது ஒரு அடிப்படை உரிமை மீறல் என்பதை சர்வதேச பிரதிநிதிகளுக்கு எடுத்துக் கூறினோம்.
அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளின் விரைவான விடுதலைக்கு உதவ வேண்டும் என்றும் அவர்களிடம் கோரிக்கை விடுத்தோம். இவ்வாறு தமிழ் கைதிகளின் மீதான சித்திரவதைகள், மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்படாது இருப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டிருந்தோம்.
எங்களது கருத்துக்களை அவர்கள் செவிமடுத்தனர். அவர்கள் இலங்கை அரசுக்கு அழுத்தங்களை பிரயோகித்து அதனூடாக நடவடிக்கையை விரைவில் எடுப்பார்கள் என்று நம்புகின்றோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக