16 ஜூலை 2012

கூட்டணியிலுள்ள கட்சிகளுக்கு ஆப்பிறுக்குகிறார் சம்பந்தர்!

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்து போட்டியிடுவதற்கு முன்வந்துள்ள போதிலும், அதன் அங்கத்துவ கட்சிகளிடையே வேட்பாளர்களை பங்கிடுவதில் சுமுகமான உடன்பாடு இருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
பொதுவான ஒரு தேர்தல் சின்னத்தின் கீழ், வேட்பாளர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கையில் கிழக்கு மாகாண சபைக்கான வேட்பாளர் தெரிவு குறித்த பேச்சுக்கள் நடைபெற்றன.
இருப்பினும் அதில் சுமுகமான உடன்பாடு எட்டப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கான வேட்பாளர்களைப் பகிர்ந்து கொள்வதிலேயே முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன.
திருகோணமலையில் 10 வேட்பாளர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் 3 வேட்பாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய நான்கு கட்சிகளுக்கும் வழங்குவது என தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சம்பந்தன் தெரிவித்ததாகவும், அதனை ஏற்பதற்குத் தாங்கள் மறுத்ததையடுத்து நீண்ட இழுபறிக்குப் பின்னர் 4 வேட்பாளர்களை தருவதற்கு உடன்பாடு எட்டப்பட்டதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தின் அரசியல் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இந்த முடிவை ஏற்று, தமது கட்சிகள் நான்கும் தலா ஒரு வேட்பாளரை நியமிக்க உடன்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கான 14 வேட்பாளர்களில் 7 பேரை தமிழரசுக் கட்சிக்கும் மிகுதி 7 பேரை ஏனைய நான்கு கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒதுக்கவேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கு தமிழரசுக் கட்சி உடன்பட மறுத்து 4 பேரை மட்டுமே ஒதுக்குவதற்கு முன்வந்ததாகவும் பின்னர் 5 பேராக அது அதிகரிக்கப்பட்டதாகவும் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டினார்.
தங்களது கோரிக்கையான 7 பேர் தேவை என்பதை பிடிவாதமாக வலியுறுத்திய போதிலும், உடன்பாடு எட்டப்படாத நிலையில், தமிழரசுக் கட்சியை மட்டும் போட்டியிடச் செய்து தமது 4 கட்சிகளும் தேர்தலில் இருந்து ஒதுங்கியிருப்பது அல்லது தமிழரசுக் கட்சியை விட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தனியாக போட்டியிடுவது என்ற முடிவுக்கு வருவது பற்றியும் தாங்கள் சிந்தித்ததாக செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.
இருப்பினும் இந்த முடிவுகள், இன்றைய அரசியல் சூழலில் மட்டக்களப்பு பிரதேசத்தின் அரசியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமது கட்சி ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து, மட்டக்களப்பில் 5 பேரை தாங்கள் வேட்பாளர்களாக நியமிப்பதற்கு விருப்பமின்றி உடன்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக