09 மே 2014

யாழ்.பல்கலையில் நடந்த அமைதிப் போராட்டம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது இனந்தெரியாதவர்ளால் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலை கண்டிக்கும் வகையில் இன்று நண்பகல் 11.15 மணியளவில் யாழ்ப்பாணம் பல் கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மௌன எதிர்ப்புப் போராட்டம் ஒன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இடம் பெற்றது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தங்கும் பொது மண்டபத்தில் இருந்து பல்வேறு வகையான கண்டனங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கிய வண்ணம் ஊர்வலமாக பிரதான வாயில் வரை வந்த விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அமைதியான முறையில் சுமார் ஒரு மணித்தியாலம் வரை பாதாதைகளை தாங்கிய வண்ணம் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அமைதியான முறையில கலைந்து சென்றார்கள்.
அவர்கள் தாங்கியிருந்த பதாதைகளில் -
'யாழ்.பல்கலைக்கழகம் என்பது கல்விக் கழகமா அல்லது கொலைக்களமா', 'நினைத்த நேரத்தில் பல் கலைக்கழகத்தை மூடுவது தான் மாணவர்களின் மையக் கல்வியா', 'யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மகத்தான ஆயுதம் பேனா முனையே தவிர துவக்கு முனையல்ல புரிந்து கொள்ளுங்கள்', 'பல்கலைக்கழகத்தின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துக','அச்சுறுத்தலும் கொலை மிரட்டலும் பயங்கரவாதம் இல்லையா','ஆசியாவின் அதிசயம் பல்கலைக்கழக ஆசிரியர்களை கொல்வதா' போன்ற சுலோகங்கள் அடங்கியிருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக