13 ஜூன் 2010

மத்திய,மாநில அரசுகள் அவமானப்படுத்தி அனுப்பியதை பார்வதி அம்மா மறந்து விடவில்லை!


தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் சிகிச்சை பெறுவதற்காக கடந்த ஏப்ரல்-16ம் தேதி மலேசியாவில் இருந்து சென்னை வந்தார்.
ஆனால் அவர் விமான நிலையத்தை விட்டு இறங்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டது இந்திய அரசு.இதையடுத்து பார்வதி அம்மாள் சிகிச்சை பெற அனுமதிப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார்.
முதல்வரின் இந்த கடிதத்திற்கு பதில் தெரிவித்தது டெல்லி. பார்வதி அம்மாள் தமிழகம் வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
ஆனால், அரசு மருத்துவமனையில் மட்டுமே அவர் சிகிச்சைபெற வேண்டும். அவர் கட்சியினர், இயக்கத்தினருடன் தொடர்பு கொள்ளக்கூடாது. உறவினர்கள் வீட்டிற்கும் செல்லக்கூடாது என்று நிபந்தனை விதித்து அனுமதி கொடுத்தது.
இத்தனை நிபந்தனைகளுக்கு மத்தியில் இந்தியா வந்து என்ன செய்வது என்று யோசித்த பார்வதி அம்மாள் இந்த அழைப்பை நிராகரித்துவிட்டார்.
இப்போது சென்னையில் உள்ள மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெறலாம் என்று மத்திய அரசு நிபந்தனையை தளர்த்தினாலும் அதை பரிசீலிக்கும் மன நிலையில் பார்வதி அம்மாள் இல்லை என்று அவரது உறவினரும், முன்னாள் எம்.பியுமான சிவாஜிலிஙகம் கூறியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக அதைப் பரிசீலிக்கக் கூட பார்வதி அம்மாள் தயாராக இல்லை என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிவாஜிலிங்கம், ’’மலேசியாவிலிருந்து படுத்த படுக்கையாக நீண்ட தூரம் பயணித்து, சென்னைக்கு வந்து, அங்கு விமானத்திலிருந்து இறங்கக் கூட அனுமதிக்கப்படாமல் இந்திய அரசு திருப்பி அனுப்பிய அவமானத்தை இன்னும் பார்வதி அம்மாள் மறக்கவில்லை.
எனவே தனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெறலாம் என்று கூறியுள்ள இந்திய அரசின் தற்போதையை அறிவிப்பை ஏற்கவோ, பரிசீலிக்கவோ அவர் தயாராக இல்லை. அந்த மன நிலை அவரிடம் போய் விட்டது.
நடமாட முடியாத, படுத்த படுக்கையாக உள்ள ஒரு வயதான பெண்ணுக்கு இந்தியாவில் மரியாதை கிடைக்கும், சிகிச்சைக்கு வழி கிடைக்கும் என்ற பார்வதி அம்மாளின் நம்பிக்கை அன்றே தகர்ந்து போய் விட்டது. அவரது மனதை நாடு கடத்தல் சம்பவம் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது, புண்படுத்தி விட்டது.
அவர் முழுமையாக குணமாகவில்லை. ஆனால் நபர்களை அவர் அடையாளம் கண்டு கொள்கிறார். அவருடைய கனடா மகள் தொடர்ந்து தொலைபேசி மூலம் தனது தாயாரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்து வருகிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக